தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் துசித ஹல்லொலுவவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
13

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் துசித ஹல்லொலுவவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (28) உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் துசித ஹல்லொலுவ, அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான 478,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய மடிக்கணனி, கையடக்க தொலைபேசி போன்ற பொருட்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டின் பேரில், கடந்த மே மாதம் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்ட துசித ஹல்லோலுவ, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

எனினும், கடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதி அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகள் விதிக்கப்பட்டதுடன், வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டது.

இதற்கிடையில், அண்மையில் அவர் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவமும் பதிவாகியிருந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, கொழும்பு குற்றப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பின்னர், தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் துசித ஹல்லொலுவவை கைதுசெய்யுமாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து ஆகஸ்ட் 19 ஆம் திகதி காலை கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here