மலையக வரலாற்றில் இ.தொ.காவுக்கென தனித்துவமான ஒரு இடமுண்டு. பாரம்பரியமாக மக்கள் மனங்களில் நீங்காத இடம்பிடித்த கட்சி என்ற வகையில் எவரையும் பிரித்தாழ்வதோ அல்லது ஒற்றுமையை சீர்குலைத்து ஒருவரை ஒருவர் பிரித்துவிட்டு வேடிக்கை பார்ப்பதோ தமது நோக்கமல்ல எனவும் இ.தொ.கா தெரிவித்துள்ளது.
ஈருடலும், ஓர் உயிருமாகவும் ஒருமித்து செயற்பட்டு வருவதை சகித்துக் கொள்ள முடியாதவர்கள் ஒற்றுமையைப் பிரித்துவிடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பதுளை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் ஊடகப்பிரிவு அதற்கு பதிலளிக்கும் வகையில் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஏழு தசாப்ங்களைக் கடந்துவிட்ட நிலையில் இ.தொ.காவிற்கென பாரம்பரியங்கள் இருக்கின்றன. மலையகத் தொழிற்சங்கங்களுக்கு மூலாதாரமாக விளங்கிய கட்சி என்பதால் எதனையும் சாதூரியமாகவும், தீர்க்கதரிசனமாகவும் அணுகி, மக்களுடைய பிரச்சனைகளை அவ்வப்போது தீர்த்து வைக்கின்றது. கட்சிகளைப் பார்த்து, ஆட்களைப் பார்த்து எந்த சேவைகளையும் வழங்கியதில்லை. உதாரணத்திற்கு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து முதலாளிமார் சம்மேளனத்தோடு பேச்சு வார்த்தை நடாத்தும் போதும் அதனைப் பெற்றுக் கொடுக்கும் போதும் அனைவருக்கும் சமமாக பாகுபாடு காட்டாது செயற்பட்டு இருப்பதை பாராளுமன்ற உறுப்பினருக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.
தோட்ட சமூகம் இன்று நேற்றல்ல தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து ஒரு வந்த சமூகம். தோட்டத் தொழிலாளர்களுக்காகவே தம்மை அர்ப்பணித்து சேவையாற்றியவர் அமரர் தொண்டமான். தொழிலாளர் சமூகத்தை கூறுபோட்டு பிரித்து விட்டு தொழிலாளர்களை வீதிக்கு கொண்டு வருவது இ.தொ.காவின் நோக்கமல்ல. 90 களில் இருந்து இன்று வரை மலையகப் பெருந்தோட்டங்களில் மின்னிணைப்புகள் சுடர்விட்டு பிரகாசிக்கின்றன. வீடமைப்புத் திட்டங்கள் இக்கால கட்டங்களில் நடைபெற்று இருக்கின்றன. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் கொள்கைப்படி தமிழர், சிங்களவர், இஸ்லாமியர் என்ற பேதம் பாராது அனைவருக்கும் சமமாக சேவை வழங்க வேண்டியதே அவரது எண்ணமாகும். மும்மொழிகளிலும் பேசுகின்றவர்களும் இ.தொ.கா வில் இன்றும் கூட அங்கத்தவர்களாக இருந்து வருகின்றார்கள்.
எவ்வாறாயினும், நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பவனே உண்மையான மனிதன். இ.தொ.கா வின் பாசறைக்குள் வளர்ந்து உயர்ந்தவர்கள் தாய் வீட்டை விமர்சிப்பது வேதனைக்குரியது. மீண்டும் ஒரு தீக்குளிப்பு நாடகத்தை பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரங்கேற்ற முயலக்கூடாது என்கிறது இ.தொ.கா.
எஸ்.தேவதாஸ்
ஊடக இணைப்பாளர்
இதொகா