ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி உயர் பீட உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன், பிரதித்தலைவரும் அமைச்சருமான பழநி திகாம்பரம், பிரதித்தலைவரும் கல்வி ராஜாங்க அமைச்சருமான வீ.ராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.திலகராஜ், வேலு குமார், அரவிந்தகுமார் மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஶ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு, சிங்.பொன்னையா, ஆர்.ராஜாராம், கே.டி.குருசாமி, எம்.உதயகுமார், எம்.ராம் உள்ளிட்ட கூட்டணியின் உயர் பீட உறுப்பினர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்கள் சம்பளப் பிரச்சினை உக்கிரமடைந்துவரும் நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இந்தப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரும் முகமாகவே இந்த சந்திப்பு அவசரமாக இடம்பெற்றுள்ளதாக கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன. தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் 1000/= அடிப்படை சம்பளமாக நாளாந்தம் அவர்களுக்கு வழங்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வீதியில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். அவர்கள் தமது கோரிக்கை தொடர்பில் நாட்டின் தலைவர் என்றவகையில் ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட்டு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். எனவே அந்த மக்களின் பிரதிநிதிகள் என்றவகையில் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு நேரடியாக கொண்டு வரும் பொருட்டே ஜனாதிபதியை சந்தித்தாகவும் தெரிவித்துள்ளனர். தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையை செவிமடுத்த ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது என தான் உணர்வதாகவும் நாளை மறுதினம் நிதியமைச்சர், தொழில் அமைச்சர், பெருந்தோட்டத்துறை அமைச்சர் ஆகியோருடன் கலந்தாலோசித்து விரைவான தீர்மானம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதாகவும் உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மலையக மக்களுக்காக நல்லாட்சி அரசாங்கம் இதுவரை முன்னெடுத்த பல்வேறு வேலைத்திட்டங்களுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி நன்றி தெரிவித்ததோடு எதிர்வரும் காலத்திலும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு தமது ஆதரவு கிடைக்கும் என்ற உறுதிப்பாட்டையும் வழங்கியதாகவும் தெரியவருகிறது. சம்பள பிரச்சினைக்கு மேலதிகமாக எதிர்வரும் காலங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் ஜனாதிபதியின் அபிவிருத்தி திட்டங்களில் இருந்து அதிக நிதி ஒதுக்கீடுகளை எதிர்பார்பதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி தரப்பில் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டதாகவும் கூட்டணி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.