தோட்டத்தொழிலாளர்கள் இனிமேல் உங்களை நம்பமாட்டார்கள்!

0
37

மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பாக பேசுவதற்கு ஜீவன் தொண்டமானுக்கு எந்த அருகதையும் கிடையாது என கடற்றொழில், நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜீவன் தொண்டமானை தோட்டத்தொழிலாளர்கள் நிராகரித்து கைகழுவி விட்டதாகவும் அமைச்சர் சபையில் குறிப்பிட்டார். நேற்றைய (06) பாராளுமன்ற அமர்வில், புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,

நாட்டில் சில காலமாக தேவையில்லாத பீதியை சிலர் கட்டவிழ்த்து வருகின்றனர். குடிநீருக்கும் ஆபத்துவந்துவிட்டதாக பீதியைக் கிளப்புகின்றனர்.

இவ்வாறான பீதிகளை உருவாக்குவதில் கடந்த 76 வருடங்களாக நாட்டின் சொத்துக்களை சூறையாடியவர்கள், எமது பொருளாதாரத்தை பூண்டோடு அழித்தவர்கள், அரச சொத்துக்களை தங்களது சொத்துக்கள் என நினைத்து தங்களது பாட்டன், பூட்டன், மாமன், மச்சான் என அனைவரும் பகிர்ந்துக்கொண்டு அதன்மூலம் கோடீஸ்ரர்களாக, குபேரர்களாக மாறிய நபர்களும் காணப்படுகின்றனர் என தெரிவித்தார்.

இதன்போது, ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான்,

சானக எம்.பி. ஆதாரபூர்வமாக ஒரு அறிக்கையின்படி குரோமியம் 10 எம்.பி. யில் இருக்கவேண்டியது 14 எம்.பி யில் உள்ளது என நிரூபித்துள்ளார். அதனை அமைச்சர் வசந்த சமரசிங்க ஆராய்ந்து பதிலளிப்பதாகவும் கூறியுள்ளார். அவ்வாறிருக்கையில், நீங்கள் பாட்டன், பூட்டன் என பேசிக்கொண்டிருக்கின்றீர்களே? என அமைச்சரைப் பார்த்து கேள்வியெழுப்பினார்.

இதனையடுத்து, தனது தனது உரையைத் தொடர்ந்த அமைச்சர் சந்திரசேகர்,

தோட்ட மக்களைப் பற்றி பேசுவதற்கு இனிமேல் உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை. நான் உங்களுடன் வாக்குவாதப்பட வரவில்லை. குடிநீர் தொடர்பாக பீதியை கிளப்ப சிலர் முயற்சிக்கின்றனர். அதில் உண்மையிருந்தால் அதனை நாம் வெளிப்படுத்துவோம் என்றுதான் நான் கூறினேன்.

எனவே, இதில் நீங்கள் தடுமாறவேண்டாம். தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளையும் நாம் ஆராய்வோம். தோட்டத்தொழிலாளர்கள் இனிமேல் உங்களை நம்பமாட்டார்கள். அவர்களின் நலனைக் கவனிக்க பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன உள்ளார். அவர் தனது பணியை நன்றாகச் செய்கின்றார். எனவே தோட்டத்தொழிலாளர்கள் தொடர்பாக நீங்கள் வீணே தடுமாற்றம் அடைய வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here