தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்பு திட்டத்திற்காக இந்த அரசாங்கம்
இதுவரை ஓர் அங்குல நிலத்தைக் கூட இதுவரை விடுவிக்கவில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் அட்டன் பிராந்திய தோட்டக் கமிட்டி தலைவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்:
நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஊடாக தோட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விடுமைப்பு திட்டங்களுக்கு அன்றைய அரசாங்கத்தின் மூலம் முறையாக காணிகள் விடுவிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தோட்டப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.
தற்போதைய அரசாங்கத்தில் ஒரு சில இடங்களில் சில வீடுகள் கட்டப்படுகின்ற போதும் அந்த வீடுகளுக்கான நிலங்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் போது பெற்றுக் கொடுக்கப்பட்டவைகளாகும்.
எனினும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்பதாக தோட்டப்பகுதிகளில் இந்திய வீடமைப்பு திட்டத்தின் ஊடாக 1300 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என்று கூறப்பட்ட போதும் இதுவரை எந்தவொரு வீடமைப்பு திட்டமும் ஆரம்பிக்கப்படவில்லை.
இதற்கான நிலமும் இதுவரை அரசாங்கத்தினால் விடுவிக்கப்படவில்லை என்று இலங்கைக்கான இந்திய தூதுவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரிடம் அண்மையில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு நிலையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த மலையக அரசியல்வாதிகள் மலையகத்தில் 1300 வீடுகள் தற்போது கட்டப்பட்டு வருவதாக மேற்கொள்கின்ற பொய்ப் பிரச்சாரங்களை எமது மக்கள் நம்பத் தயாராக இல்லை.
எனவே ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து அமையவுள்ள புதிய அரசாங்கத்தின் ஊடாக முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் மூலம் மலையகத்தில் மீண்டும் வீடமைப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்படும். ஆகவே இந்த விடயம் தொடர்பில் எமது தொழிற்சங்க தோட்டத் தலைவர்கள் எமது அங்கத்தவர்களின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். அத்துடன் மலையகத்தின் வீடமைப்புத் திட்டம் தொடர்பிலான தற்போதைய பொய்ப் பிரச்சாரங்களையும் நம்ப வேண்டாம்.
என்று கேட்டுக்கொள்கிறேன்.