நாகஸ்தனை தோட்டத்தில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தவறான புரிதலுடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாகஸ்தனை தோட்டத்தின் நிலைமை குறித்து வேலுகுமார் எம்பி சில குற்றம்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் பிரகாரம் அவருக்கு தவறான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது என்று நான் நம்புகிறேன். நாகஸ்தனை தோட்டம் சப்ரகமுவ மாகாணத்திற்கும் மத்திய மாகணத்திற்கும் இடையில் பொதுவான தோட்டமாக அமைகிறது. இந்த தோட்டத்தில் தொடர்ந்தும் 10 நாட்களாக குழப்பம் நிலவி வருவதாகவும் மத்திய மாகாண சபையின் முன்னாள் தலைவர் மதியுகராஜா அவர்களும், முன்னாள் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் பாஸ்கர் அவர்களும் செந்தில் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து முறையான ஆய்வு செய்யப்பட்டது.அந்த ஆய்வின் ஊடாக இந்த தோட்டத்தில் 10 நாட்களுக்கு முன்பதாக சின்ன துறை வெளியேற்றப்பட்டதாகவும்,அவுட் குரோவ் முறைமை அகற்றப்பட்டதாகவும் இதனால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து இது தொடர்பாக J.D.B கம்பனியினரிடம் செந்தில் தொண்டமான் விளக்கம் கோரியிருந்தார். இங்கு உள்ளக முகாமைத்துவ மாற்றமே இடம்பெற்றுள்ளது என்று எழுத்து மூலமாக JDB கம்பனி உறுதியளித்துள்ளது, மேலும் தோட்டத்தில் அவுட்குரோவர் முறை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் செந்தில் தொண்டமானின் பணிப்புரையின் பிரகாரம் மீண்டும் அவுட்குரோவர் முறைமை தொடர அனுமதி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட கடிதம் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.