நாடாளுமன்ற செயற்பாட்டை வைத்து முற்போக்கு கூட்டணி எம்பிக்களை கணிப்பிட முடியாது; அமைச்சர் மனோ!

0
167

தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்பீக்கள், எப்படி பாராளுமன்றில் செயற்படுகிறார்கள் என்ற ஒரு அலசலை ஒரு ஊடகவியலாளர் செய்துள்ளார். தனது கருத்தை முன் வைக்க அவருக்கு இருக்கும் அவரது உரிமையை அங்கீகரிக்கும் அதேவேளை, என் கருத்து இது:
இந்த அலசலின் அடிப்படை, என் நண்பர் நிசான் டி மெல் நடத்தும் “மந்திரி-டொட்-கொம்” என்ற தள கணிப்பீடுகள் என எண்ணுகிறேன். இந்த கணக்கீடு, எங்களுக்கு பொருந்தாது. அது பெரும்பான்மை கட்சிகளுக்கு பொருந்தலாம்.

தமிழ் முற்போக்கு கூட்டணி என்பது ஒரு மனிதன். அங்கே தலை, கண்கள், கைகள், கால்கள் என்று பல்வேறு அங்கங்கள் உள்ளன. ஒவ்வொரு அங்கத்துக்கும் ஒவ்வொரு பணி உண்டு. அவற்றை அவை செய்கின்றன. தலை செய்வதை கை செய்ய முடியாது. கண் செய்வதை கால் செய்ய தேவையும் இல்லை.

நாங்கள் ஆக ஆறு பேர் மட்டும் என்பதால் பணிகளை பிரித்து செய்வது ஆரோக்கியமானது.

சபையில், பேச எமக்கு ஒதுக்கப்படும் நேரம் பெரும்பாலும் திலக்ராஜ், வேலுகுமார், அர்விந் குமார் ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன. முக்கியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம் நான் பேசுகிறேன். ஏனைய பணிகளை, ஏனையோர் பிரித்து கொண்டுள்ளோம்.

மேலும் பாராளுமன்றம் என்றால், அது சபையில் பேசுவது என்பது மட்டும் அல்ல. பல்வேறு குழுக்கள் உள்ளன. நான் அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவில், தேர்தல் முறை, அதிகார பகிர்வு விடயங்களில் செயற்படுகிறேன். கட்சி தலைவர் குழு, அரச தரப்பு குழு என்று பல்வேறு குழுக்கள் உள்ளன.

“மந்திரி-டொட்-கொம்” இந்த குழுக்கள் பற்றியும் கணக்கீடு வேண்டும். மேலும் பாராளுமன்றத்துக்கு வெளியேயும் ஆயிரம் கட்சி, மக்கள் பணிகள் உள்ளன. பெரும்பான்மை கட்சி எம்பீக்களுக்கு இந்த பணிகள் ஒப்பீட்டளவில் குறைவு.

ஆனால் ஒன்று, கடந்த காலங்களை விட இன்று மலையக மக்கள் பிரச்சினை பாராளுமன்றத்தில் பேசப்படுகிறது. தேசிய, சர்வதேசிய அரங்குகளில் எடுத்து வைக்கப்படுகிறது. (இன்று கூட ஆஸ்திரேலிய தூதுவருடனான, என் பிரத்தியேக சந்திப்பில் மலையக மக்கள் தொடர்பாக விரிவாக பேசியிருந்தேன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here