நாடளாவிய ரீதியில் உள்ள 18 பொருளாதார மையங்களையும் இணைத்து திரைசேறியின் முழுப்பங்களிப்புடன் ஒரு அரச நிறுவனமாக நிறுவப்படும் என்றும் பொருளாதார மையங்களை எந்த வகையிலும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என்றும் வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
பொருளாதார மையங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் வசந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
இந்த இணைப்பு பொருளாதார மையங்களின் உரிமை மற்றும் நிர்வாக சிக்கல் தொடர்பாக தற்போதுள்ள சிக்கல்களை தீர்த்து திறமையான சேவையை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது என்றும் பொருளாதார மையங்களின் வர்த்தக சங்கங்கள் செயல்படுத்த தயாராகும் திட்டங்கள் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ரத்மலானை பொருளாதார மையம் ரயில்வே திணைக்களத்திற்குரியது. தம்புத்தேகம பொருளாதார மையம் மகாவலி அதிகார சபைக்குரியது. பொரளஸ்கமுவ பொருளாதார மையம் கூட்டுறவு சங்கத்திற்குரியது. இவைகளின் உரிமையில் சிக்கல் இருப்பதாகவும் இந்த பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் இணைந்து செயல்படவுள்ளதாவும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அதன்படி 18 பொருளாதார மையங்களும் இணைக்கப்பட்டு தேசிய பொருளாதார மையங்கள் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் அரச நிறுவனம் உரிமையாளராக நியமிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் 14 பொருளாதார மையங்கள் செயற்படுவதாகவும் மேலும் 04 பொருளாதார மையங்கள் ஆரம்பிக்கப்படாமல் இருப்பதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்தார்.