” நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அபிவிருத்தியைவிடவும் மக்கள் உயிர்வாழ்வதற்கு அவசியமான வேலைத்திட்டங்களுக்கே முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும். அதற்கமையவே கொட்டகலை சுகாதார பிரிவில் சத்துணவு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.” – என்று கொட்டகலை பிரதேச சபையின் தலைவரும், இ.தொ.காவின் இளைஞர் அணி தலைவருமான ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.
கொட்டகலை பிரதேச சபை நிர்வாக எல்லையில் மந்த போசனை நிறைந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள 280 குடும்பங்களுக்கு அரிசி, கடலை, நெத்தலி முதலான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் இன்று (04.01.2022) கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில், மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியின் சிபாரிசுக்கு அமைவாக 280 குடும்பங்கள் இனங்காணப்பட்டு, சுமார் 12 இலட்ச ரூபா செலவில் அவர்களுக்கான பொதிகள் கொட்டகலை ரிஷிகேஷ் மண்டபத்தில் இன்றைய தினம் வழங்கப்பட்டது.
அத்தோடு கடந்த ஆண்டு இறுதியில் கொட்டகலை பிரதேச சபையின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாசிப்பு மாதத்தில் பங்குபற்றிய 150 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், மாணவர்களின் நலன் கருதி மூன்று பாடசாலைகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபா பெறுமதி வாய்ந்த மருந்து வகைகளுடனான முதலுதவிப் பெட்டிகளும் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவர், உறுப்பினர்கள், கொட்டகலை மற்றும் லிந்துலை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
” நுவரெலியா மாவட்டத்தில் மந்தபோசனை பிரச்சினையென்பது பல வருடங்களாகவே இருந்துவருகின்றது. எனினும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தற்போது மந்தபோசனை பிரச்சினை ஏற்பட்டுள்ளதாலேயே – தற்போது நுவரெலியா பற்றியும் கதைக்கப்படுகின்றது. அப்படியாவது பேசுகின்றனரே என மகிழ்ச்சியடைய வேண்டியதுதான்…
அபிவிருத்தியைவிடவும் மக்கள் உயிர்வாழ்வதற்கான திட்டங்களே தற்போது அவசியம். அந்தவகையில் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சிறார்கள் மத்தியில் நிலவும் மந்தபோசனை பிரச்சினைக்கு தீர்வை வழங்க திட்டமிட்டோம். சத்துணவை வழங்குவதற்காக பாதீட்டில் 25 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச சபையின் உப தலைவர், உறுப்பினர்கள், செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். நுவரெலியா மாவட்டத்தில் ஏனைய பகுதிகளிலும் இதுபோன்ற வேலைத்திட்டம் கட்டாயம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
எமது பிரதேச சபையில் பல பிரச்சினைகள் உள்ளன. ஆளணி பற்றாக்குறை, வளங்கள் பற்றாக்குறை என பட்டியல்படுத்திக்கொண்டே செல்லாம். இவற்றை மக்களிடம்போய் கூறிக்கொண்டிருக்க முடியாது. தமக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் மக்கள் தமது பிரதிநிதிகளுக்கு வாக்களிக்கின்றனர். அந்தவகையில் என்னால் முடிந்த பல விடயங்களை – வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளேன்.” – என்றார்.
(க.கிஷாந்தன்)