முகக்கவசம் அணியும் விடயத்தில் அரசாங்கத்தின் திடீர் தீர்மானங்கள் போராட்டங்களை குறுக்கு வழியில் ஒடுக்குவதற்காக முன்னெடுக்கப்படும் முதிர்ச்சியற்ற செயல்பாடு என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
உலகில் பல்வேறு நாடுகளில் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டே உள்ளது. சீனா உட்பட பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலில் அரசாங்கம் முகக்கவசம் அணியும் விடயத்தில் வேடிக்கையான தீர்மானங்களை எடுத்துவருகிறது.
நேற்றுமுன்தினம் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லையென அறிவித்த அரசாங்கம் மீண்டும் நேற்றுமுதல் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டமென தெரிவித்துள்ளது.
இவ்வாறு அறிவிப்புகள் வெளியிட இரண்டு காரணங்கள் தான் உள்ளன. மீண்டும் நாட்டில் கொரோனா தொற்றை அதிகரித்து நாட்டை முடக்குவதற்கும் மற்றொன்று போராட்டக்காரர்களை அடையாளம்கண்டு ஒடுக்குவதற்காகும்.
கொரோனா தொற்றுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு ஒருவருடத்தின் பின்னர் மீண்டும் தடுப்பூசியை செலுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது. தற்போதைய சூழலில் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அரசாங்கத்துக்கு டொலர்கள் இல்லை. அதேபோன்று அத்தியாவசிய மருந்துகளை கூட அரசாங்கத்தால் கொள்வனவு செய்யமுடியாதுள்ளது.
இவ்வாறு மருந்துகள், ஊசிகள் ,அத்தியாவசியப் பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு டொலர் இல்லாத பிரச்சினைகள் இருக்கும் பொழுது முகக்கவசம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தானது, எதற்கு முன்னுரிமை வழங்குவது என்பது அரசாங்கத்திற்கு புரியவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது . மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காது. அரசாங்கம் குறுக்குவழியில் இவ்வாறு செயல்படுவது தற்போதைய சூழ்நிலையை அரசாங்கம் முழுமையாக புரிந்துக்கொள்ளவில்லை என்பதை இவர்களின் நடவடிக்கை வெளிப்படுத்துகிறது என்றார்.