” நாம் வாழும் மண்ணையும், நமது பெண்களையும் இரு கண்கள்போல பாதுகாக்க வேண்டும். எமது மலையக மண்ணில் இருந்து வறுமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். அதற்காகவே காங்கிரஸ் போராடிக்கொண்டிருக்கின்றது. இதற்காக பல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் ஓர் அங்கமாகவே பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரஜாசக்தி செயல் திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
இயற்கை அனர்த்தம் மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கபட்ட நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த பெண்களுக்கு தங்களின் சுகாதார மற்றும் வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கில் நிவாரண பொதிகள் இன்று (25.08.2022) வழங்கப்பட்டது.
நாவலப்பிட்டி பகுதி, பார்கேபல் தோட்டம், ஹையிட்ரி தோட்டம் போன்ற பகுதிகளில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ், புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக ஐக்கிய நாடுகளின் சனத்தொகைக்கான நிதியத்தின் நிதி உதவியுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரஜாசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமுமான பாரத் அருள்சாமியின் ஏற்பாட்டில் பெண்களுக்கு குறித்த நிவாரண பொதிகள் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரஜாசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமுமான பாரத் அருள்சாமி, ஐக்கிய நாடுகளின் சனத்தொகைக்கான நிதியத்தினுடைய இலங்ககைக்கான வதிவிட பிரதிநிதி குன்லே அதெனியி, புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதிநிதிகள், பிரஜாசக்தி நிறுவனத்தின் பிரதிநிதிகள் என பலரும் இதன்போது கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் பாரத் அருள்சாமி கூறியவை வருமாறு,
” மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி சமூகமாற்றத்தை நோக்கி நகர வேண்டும் என்பதே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதான இலக்காக இருந்து வருகின்றது. அன்று முதல் தற்போதைய எமது பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் காலம்வரை இதற்காக காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. பல வலிகளை சுமந்துள்ளது. சவால்கள் மற்றும் தடைகளை எதிர்கொண்டு ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது.
எனினும், சமூகமாற்றத்தை நோக்கிய எமது பயணத்தில் வறுமை என்பது பெரும் தடையாக உள்ளது. எனவே, மலையக பெருந்தோட்டப்பகுதியில் இருந்து வறுமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். அதற்கான திட்டங்களை நாம் வகுத்து வருகின்றோம். இந்நிலையில் இந்த வறுமை நிலைமையை பயன்படுத்தி எமது பெண்களை வீட்டு வேலைக்கு அழைத்துச்செல்ல சில தரகர்கள் தீவிரமாக செயற்படுகின்றனர். சிலர் சட்டவிரோதமாக சிறார்களையும் கொண்டு செல்கின்றனர். தொழில் பாதுகாப்பு உட்பட எந்தவொரு உத்தரவாதமும் இன்றி, அற்ப பணத்துக்காக அவர்கள் எம்மவர்களை விற்பனை செய்கின்றனர். ஹிஷாலினியை இழந்தோம். இன்று ரமணியை இழந்துள்ளோம். ஊடகங்களில் வெளிவராத பல சம்பவங்களும் உள்ளன.
இந்நிலைமை தொடரக்கூடாது. அதற்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். பெண்களின் பொருளாதாரத்தை பலப்படுத்த சுயதொழில் ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம். சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இதற்கான உதவிகள் வழங்கப்படும். அதேபோல பெண்களின் சுகாதார பாதுகாப்பும் முக்கியம். அதற்கான வழிவகைகளும் செய்யப்பட்டுவருகின்றன.
மீன்பிடித்து முன்னேற வேண்டும் என நினைப்பவருக்கு தூண்டிலை மட்டும் கொடுத்தால் போதும், அவர் நிச்சயம் வெற்றி கண்டுவிடுவார். மீனை பிடித்து கொடுக்க தேவையில்லை. எமது பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை வழங்கினால் அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.
நாடோ, வீடு பெண்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் இருந்தால்தான் எல்லா விடயங்களும் நன்றாக நடைபெறும். ” – என்றார்.
க.கிஷாந்தன்