‘க்ளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்துடன் இணைந்தவகையில் செயற்படுத்தப்படும் “Dream Destination” வேலைத்திட்டத்தின் கீழ் நாரஹேன்பிட்டி புகையிரத நிலையத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று (27) ஆரம்பிக்கப்பட்டது.
களனிவெளிப் பாதையின் மற்றுமொரு தனித்துவமான புகையிரத நிலையமாக கருதப்படும் நாரஹேன்பிட்டி புகையிரத நிலையம், கொடா வீதி புகையிரத நிலையத்திற்கும் கிருலப்பன புகையிரத நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.
கொழும்பிலிருந்து 5.06 கி.மீ தூரத்திலும், கடல் மட்டத்திலிருந்து 3.72 மீ உயரத்திலும் அமைந்துள்ள இந்த புகையிரத நிலையம், இரண்டு பிரதான மேடைகளையும் ஒரு பயணச்சீட்டு கவுண்டரையும் கொண்டுள்ளது.
தொழில் திணைக்களம், போக்குவரத்துத் திணைக்களம், நில அளவைத் திணைக்களம் உள்ளிட்ட பல அரச, அரை – அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அருகில் அமைந்துள்ள இந்த புகையிரத நிலையத்தை, அன்றாட கடமைகளுக்காக வரும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
புகையிரதப் பாதையின் குறுக்கே மேடைகளை இணைக்கும் வகையில் பயணிகள் மேம்பாலம் நிர்மாணித்தல், இரண்டாவது மேடையின் கூரை அமைத்தல், சுகாதார வசதிகளை மேம்படுத்தல், பயணிகளுக்கு வசதியாக இருக்கைகள் அமைத்தல் போன்ற நவீனமயமாக்கல் பணிகள் தனியார் துறையின் முழுமையான அணுசரனையுடனும் NIO Engineering இன் ஆதரவுடனும் செயல்படுத்தப்படுகிறது.




