நாவலப்பிட்டி கொலப்பத்தனை பகுதியில் 17.08.2018 அன்று மாலை பெய்த கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசியதனால் அப்பகுதியில் 6ம் இலக்கம் கொண்ட லயன் குடியிருப்பில் வீடு ஒன்றின் மீது பழமைவாய்ந்த பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் வீட்டின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.
இதனால் வீட்டிலிருந்த சில பொருட்கள் சேதமாகியுள்ளதோடு, சுவர்களும் சரிந்து விழுந்துள்ளது.
மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக குறித்த வீட்டிற்கு மின் இணைப்பும் தடைப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தவர்கள் பாதுகாப்பாக அயலவர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டு தற்போது உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
முறிந்து விழுந்த மரத்தினை இதுவரை அப்புறப்படுத்தாத காரணத்தினால் மேலும் வீடுகளுக்கு சேதம் ஏற்படக்கூடும் என தெரிவிக்கும் இவர்கள் இதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
க.கிஷாந்தன்