நேபாளத்தின் கிழக்கு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்திற்குள் மூன்று வெவ்வேறு மாவட்டங்களில் குறித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன
நேபாளத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கிழக்கு நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 25 பேர் காணாமல் போயுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேபாளத்தின் சங்குவசபா மாவட்டத்தில் , நீர்மின் திட்டத்தில் பணிபுரியும் 16 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதுடன், ஏழு வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பஞ்சதர் மாவட்டத்தில் ஐந்து பேர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளதாகவும் அந்த மாவட்டத்தில் சாலை இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புங்லிங் (Phungling) பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் , ‘நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட சொத்து இழப்புகளால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். மேலும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் நான் கோரிக்கை விடுகிறேன்’ என நேபாள பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.