மத்திய மாகாணத்தில் உள்ள மலையகத் தமிழ் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் மற்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் உறுதியளித்துள்ளார்.
மத்திய மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து வருகை தந்த வேலை வாய்ப்பில்லாது உள்ள ஆண்களும் பெண்களுமான சுமார் 80 பட்டதாரிகள் அட்டன் அஜந்தா விருந்தகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரத்தைச் சந்தித்து அரசாங்கம் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஆசிரிய நியமனம் வழங்கிய பின்னர் ஏனையவர்களுக்கு வழங்குவதற்கு பாராளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்கள். அது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
‘தேர்தல் நெருங்குவதால் அரசாங்கம் நியமனங்களை வழங்கி வருகின்றது. அதேநேரம், மத்திய மாகாணத்தில் 600 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இருக்கும் போது, ஆசிரிய உதவியாளர்களை நியமித்து, அவர்கள் குறிப்பிட்ட காலப் பகுதியில் பட்டதாரிகளாகவோ, டிப்ளோமா பயிற்சி பெற்றவர்களாகவோ வர வேண்டும் என்றும் அதுவரை மாதாந்தம் 20 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளமை ஏற்கனவே பட்டதாரிகளாக இருந்தும் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளவர்களுக்கு உளவியல் ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கை நியாயமானதாகும்.
தோட்டங்களில் வேலை செய்யும் பெற்றோர் தங்களின் கஷ்டங்களுக்கு மத்தியிலும் பிள்ளைகளை படிக்க வைத்து பட்டதாரிகளாக உயர்த்தி மலையகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். அத்தகைய தியாகம் நிறைந்த பெற்றோருக்கு தமது உழைப்பின் மூலம் பொருளாதாரத்தை வளப்படுத்த முடியாத ஏக்கம் இளைஞகள் மத்தியில் காணப்படுகின்றது. நியமனம் கிடைக்காத காரணத்தால் மனம் சோர்ந்து விடக் கூடாது. அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது மலையக அரசியல்வாதிகளின் கடமையாகும். மத்திய மாகாணத்துக்கு மாத்திரம் ஆசிரிய உதவியாளர்களை நியமிக்கவுள்ளமை அநீதியாகும். ஏனைய மாகாணங்களுக்கு இத்தகைய பாகுபாடு இல்லை என்பதும் குறிப்பிடத் தக்க விடயமாகும்.
பட்டதாரிகளாக உள்ளவர்கள் தமது ஆங்கில அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அரசாங்க நியமனத்தை மாத்திரம் எதிர்பார்த்துக் காத்திருக்காமல் தனியார் துறைகளிலும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அவ்வாறு தனியார் துறைக்கு செல்ல விருப்பமானவர்கள் தங்களது கல்வித் தகைமைகளுடன் விபரத்தை என்னிடம் கொடுத்தால் அதற்கான உதவிகளை செய்வதற்குத் தயாராக இருக்கின்றேன்.
மலையகத்தில் தனி வீட்டுத் திட்டம் உள்ளூராட்சி மன்றங்கள், செயலங்கள் அதிகரிப்பு, காணி உறுதிப் பத்திரங்கள் போன்றவற்றை அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் பெற்றுக் கொடுத்திருந்தேன். எனவே, பட்டதாரி நியமனத்துக்கும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்த நியமனம் தொடர்பாக நான் வீர வசனம் பேசி ஏமாற்ற விரும்பவில்லை. கல்வியமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரை சந்திப்பதற்கு சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொடுக்க விரைவில் ஏற்பாடு செய்து தருவேன். அதற்கான போக்குவரத்துச் செலவுகளையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்”என்றார்.