நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
இதனால் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில் ஒருநாள் போட்டித் தொடரை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் வகையில் அமைந்துள்ள கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நாளை (18-ம் தேதி) நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் இரு அணி வீரர்களும் இந்தூர் வந்தடைந்தன. இதைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணி வீரர்கள் நேற்று ஹோல்கர் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.




