பாதுக்காப்பை மீறி தாக்குதலை தீவிரப்படுத்திய ஈரான்: நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் அவசர எச்சரிக்கை!

0
6

ஈரானின் அணு ஆயுத தயாரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த 28-ந் தேதி அந்த நாடு மீது போரை தொடங்கின. தலைநகர் டெஹ்ரானில் நடந்த அதிரடி தாக்குதலில் ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதனால் ஆவேசமடைந்த ஈரான் இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் அதிரடி தாக்குதலை தொடர்ந்தது. இதனால் வளைகுடா பிராந்தியம் முழுவதும் பயங்கரமான போர் மூண்டுள்ளது.

உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த போர் இன்று 6-வது நாளாக உக்கிரமாக நடந்து வருகிறது. முன்னதாக நேற்று ஈரானின் பாதுகாப்பு படைகளை குறிவைத்து இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்தியது. இதனால் தலைநகர் டெஹ்ரான் முழுவதும் பயங்கர குண்டுவெடிப்பு சத்தமும், அவசரகால படையினரின் சைரன் சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தன.

இதைப்போல அமெரிக்காவும் ஈரானின் பல்வேறு இலக்குகளை ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் தகர்த்தது. குறிப்பாக ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு, ஈரானின் நூற்றுக்கணக்கான நீண்டதூர ஏவுகணைகள், ஏவுதளங்கள் மற்றும் டிரோன்களை அழித்ததாக அமெரிக்க கடற்படை அதிகாரி பிரட் கூப்பர் கூறினார்.

மறுபுறம் ஈரானும் இஸ்ரேலை நோக்கி நேற்றும் அலையலையாக ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகர்களை சுற்றிலும் வெடிச்சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருந்தன. எனினும் ஈரானின் பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை தங்கள் வான்பாதுகாப்பு அமைப்பு தாக்கி அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்தும் ஈரான் பயங்கர தாக்குதல்களை நிகழ்த்தியது. அந்தவகையில் அமெரிக்காவின் 5-வது கடற்படைப்பிரிவு அமைந்துள்ள பஹ்ரைனில் நேற்று காலையிலேயே சைரன்கள் ஒலித்ததை கேட்க முடிந்தது. இதைப்போல கத்தாரில் ஈரான் வீசிய 2 ஏவுகணைகளில் ஒன்று அல்-உதைத் தளத்தில் விழுந்ததாகவும், எனினும் இதில் சேதம் எதுவும் இல்லை என்றும் அந்த நாட்டு ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் சவுதி அரேபியாவிலும் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் முக்கியமாக சவுதி அரேபியாவின் ராஸ்தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீண்டும் தாக்குதல் நடந்தது. முன்னதாக கடந்த 2-ந் தேதியும் இந்த நிறுவனத்தில் ஈரான் தாக்குதல் நடத்தியதால் அந்த ஆலை தற்காலிகமாக மூடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாதுக்காப்பை மீறி தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தி வரும்நிலையில், நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அதன் எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

சிறிது நேரத்திற்கு முன்பு, ஈரானில் இருந்து இஸ்ரேல் நாட்டின் எல்லையை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதை இஸ்ரேல் ராணுவம் (IDF) அடையாளம் கண்டுள்ளது.

அச்சுறுத்தலைத் தடுக்க பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. கடைசி சில நிமிடங்களில், ஹோம் ப்ரண்ட் கமாண்ட் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மொபைல் போன்களுக்கு நேரடியாக ஒரு பூர்வாங்க உத்தரவை பிறப்பித்தது. பொதுமக்கள் பொறுப்பேற்று அறிவுறுத்தல்களின்படி செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் – அவை உயிர்களைக் காப்பாற்றுகின்றன. எச்சரிக்கையை பெற்றவுடன் பாதுகாக்கப்பட்ட இடங்களுக்குள் நுழைந்து புதிய அறிவிப்பு வரும் வரை அவற்றில் இருக்க வேண்டும்.

வெளிப்படையான உத்தரவைப் பெற்ற பின்னரே பாதுகாக்கப்பட்ட இடத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படும். ஹோம் ப்ரண்ட் கமாண்ட் அறிவுறுத்தல்களின்படி தொடர்ந்து செயல்படுங்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்து விட்டது. மறுபுறம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. எனினும் போரின் முதல் 2 நாட்களிலேயே அமெரிக்காவின் 500-க்கு மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரானின் புரட்சிகர காவல்படை கூறியுள்ளது.

ஆனால் இஸ்ரேலில் நிகழ்ந்த இறப்பு விவரங்கள் வெளியாகவில்லை. அங்கே இதுவரை 11 பேர் மட்டுமே இறந்ததாக அந்த நாடு கூறியுள்ளது. உலக நாடுகளை உலுக்கி வரும் போர் 6-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவு டன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என ஈரான் கூறியுள்ளது. அமெரிக்காவை நம்ப தயாரில்லை எனவும், நாங்கள் விரும்பும் வரை போரை தொடர்வோம் எனவும் அயதுல்லா அலி காமேனியின் ஆலோசகர் ஒருவர் கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here