பார்முலா 1 கார்பந்தயம்: சீன போட்டியில் இத்தாலி வீரர் கிமி அண்டோனெல்லி முதலிடம்

0
3

கார்பந்தயங்களில் மிகவும் பிரபலமான பார் முலா1 கார்பந்தயம் இந்த ஆண்டு 22 சுற்றுக ளாக நடத்தப்படுகிறது. இதன் 2-வது சுற்றான சீன கிராண்ட்பிரீ பந்தயம் ஷாங்காய் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 305.066 கிலோ மீட்டராகும். இலக்கை நோக்கி 11 அணிக ளைச் சேர்ந்த 22 வீரர்கள் காரை செலுத்தினர். இதில் முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட இத்தாலி வீரர் கிமி அண்டோனெல்லி (மெர்சிடஸ் அணி) ஒரு மணி 33 நிமிடம் 15.607 வினாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தார்.

அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தது. 19 வயதான அண்டோனெல்லி பார்முலா 1 கார்பந்தய ரேசில் குறைந்த வயதில் வெற்றி கண்ட 2-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். இலக்கை அடைந்ததும் உணர்ச்சி வசப்பட்ட அவர் ஆனந்த கண்ணீர் விட்டார்.

அவரை விட 5.515 வினாடி மட்டுமே பின்தங்கிய இங்கிலாந்து வீரர் ஜார்ஜ் ரஸ்செல் (மெர்சிடஸ் அணி) 2-வதாக வந்து அதற்குரிய 18 புள்ளிகளை பெற்றார். 7 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (பெராரி அணி) 3-வது இடத்தை பிடித்து, 15 புள்ளிகளை வசப்படுத்தினார். 41 வயதான ஹாமில்டன் டாப்-3 இடத்திற்குள் வருவது 2024-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லான்டோ நோரிஸ் (மெக்லரன் அணி) தொழில்நுட்ப கோளாறு காரணமாக காரை கிளப்ப முடியாமல் தவித்தார். பிரச்சினையை உடனடியாக சரி செய்ய முடியாததால் அத்துடன் விலக நேரிட்டது. அதே அணியைச் சேர்ந்த மற்றொரு வீரர் ஆஸ்கர் பியாஸ்ட்ரியும் (ஆஸ்திரேலியா) இத்தகைய கோளாறால் ஆரம்ப கட்டத்திலேயே ஏமாற்றத்துடன் நடையை கட்டினார். இதன் 3-வது சுற்று போட்டியான ஜப்பான் கிராண்ட்பிரீ வருகிற 29-ந்தேதி சுசுகாவில் நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here