அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஆண்ட்ரூவும் மீது வர்ஜீனியா கியூஃப்ரே (41) என்ற பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும், பாலியல் அடிமையாகப் பயன்படுத்தியதாகவும், இளவரசர் ஆண்ட்ரூவும் 17 வயதில் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும் வர்ஜீனியா குற்றம் சாட்டினார்.
இளவரசர் ஆண்ட்ரூவுடன் உடலுறவு கொள்ள ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனக்கு 15,000 டாலர் கொடுத்ததாக வர்ஜீனியா வெளிப்படுத்திய ஆதாரங்கள் அடங்கிய நீதிமன்ற ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் பல சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்த வழக்கில் 2008 இல் தண்டனை பெற்ற ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2019 இல் நியூயார்க் நகர சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் அளித்த வர்ஜீனியா இந்தாண்டு ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தொடர்ந்து தனது அரச பட்டங்களை துறப்பதாக பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து இளவரசர் ஆண்ட்ரூ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதற்கான எனது முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன்.
தற்பொழுது மன்னராட்சியின் ஒப்புதலுடன் எனது பட்டத்தையோ அல்லது எனக்கு வழங்கப்பட்ட கௌரவங்களையோ இனி நான் பயன்படுத்த மாட்டேன் என்று முடிவு செய்துள்ளேன். நான் முன்பு கூறியது போல், என் மீதான குற்றச்சாட்டுகளை நான் உறுதியாக மறுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.




