அண்மையில் மலையகத்தில் இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களின் அரசியல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு கள் விநியோகித்தது தேர்தல் சட்டத்தை கடுமையாக மீறும் செயல் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களின் போது தமது ஊழியர்களுக்கு இலவசமாக கள் போத்தல்கள் வழங்கப்படுவதாக அதிகாரிகளிடமும் தோட்டத் துறை முதலாளிகளிடமும் இருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் (IRES) நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.
விநியோகிக்கப்பட்ட மதுபானம் தரம் குறைந்ததாக காணப்படுவதாகவும், இதனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு சுகாதார கேடு ஏற்படுவதாகவும் முறைப்பாடு செய்தவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். மதுவை உள்ளெடுத்த பின் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததாகவும் தெரிய வந்தது.
தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது மதுபானங்களை விநியோகிப்பது தேர்தல் சட்டத்தை கடுமையாக மீறுவதுடன் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை சட்டத்தை மீறுவதாகவும் கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
“இந்த நிலைமை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம், மேலும் ஒரு சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு பொலிஸ் மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்கள் உட்பட அனைத்து சட்ட அமலாக்க அதிகாரிகளும் இதில் உடனடியாக தலையிட வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்த சம்பவங்கள் குறித்து இலங்கை தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடளிக்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.