பிரஜா சக்தி திட்டம் – ஜே.வி.பியின் சர்வாதிகாரம்!

0
36

தற்போதைய ஜே.வி.பி அரசாங்கம் பிரஜா சக்தி என்ற திட்டத்தை வகுத்து, நாட்டின் கிராமங்கள் மற்றும் நகரங்களை அபிவிருத்தி செய்து, வறுமையை ஒழிக்கும் பெரும் திட்டத்தை முன்னெடுத்து வருவதாக காண்பித்துக் கொண்டாலும், இதன் உள்ளடக்கத்தைப் பார்க்கும்போது, ​​வறுமையை ஒழிக்க ஒதுக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை என்பதும், மக்களுக்கு சுமையைக் கொடுத்து, மேலும் வரிகளை விதிப்பதன் மூலம் இன்னும் அதிகமான நிதிகளை திரட்டிக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறான நிலையில், பிரஜா சக்தி என்ற பெயரில் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியலை வலுப்படுத்திக் கொள்ளும் அரசியல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளால் இன்று (14) பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

வறுமையை ஒழிக்கும் போர்வையில் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரஜா சக்தி திட்டத்தின் மூலம் மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கையை பரப்புவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த ஊடக சந்திப்பு நடத்துவதற்கான காரணமாக அமைந்து காணப்படுகின்றன.

மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்க வேண்டிய உரிய அந்தஸ்து மற்றும் தங்கள் கடமைகளை முறையாகச் செய்வதற்கு தடங்கலை ஏற்படுத்திக் கொண்டு, மறுபுறமாக மக்கள் விடுதலை முன்னணியின் அடிமட்ட தொண்டர்களுக்கு இந்த பிரஜா சக்தி வேலைத்திட்டத்தின் ஊடாக கூடிய அதிகாரத்தை வழங்கி செயற்பட்டு வருகின்றனர்.

சமூக நல மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு பதிலாக, கிராம சேவை பிரிவுகளை மக்கள் விடுதலை முன்னணியின் அடிமட்ட அரசியல் கட்டமைப்பை பெலவத்தை தலைமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் பிரயத்தனமே இங்கு நடந்து வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இளைஞர் கழகம், சிவில் பாதுகாப்பு குழுக்கள் உள்ளிட்ட காணப்படும் சகல பதிவுசெய்யப்பட்ட சட்ட ரீதியான அடிமட்ட அமைப்புகளினது முழு அதிகாரத்தையும் கைப்பற்றும் இந்த சர்வாதிகார நடவடிக்கையையே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அரசியலமைப்புச்சார் சர்வதிகாரமே இங்கு முன்னெடுக்கப்பட்டு வருவது நன்கு தெளிவாகிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம், இதனை முற்றாக எதிர்க்கிறோம். மக்கள் விரோத திட்டத்தை முன்னெடுக்காமல், ஜனநாயகத்திற்கு காணப்படும் இடத்தை மழுங்கடிக்கச் செய்ய அனுமதிக்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதிகாரத்தைக் கைவிட்டு, இந்த பிரஜா சக்தி திட்டத்தை இனம், மதம், வர்க்கம் மற்றும் கட்சி வேறுபாடின்றி சமூகத்துக்கு பக்க பலத்தைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு திட்டமாக மாற்றுமாறு நாம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். இந்த சர்வாதிகாரத்தை தோற்கடிக்க எதிர்க்கட்சி ஒன்றிணையும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here