சுப்ரிம் செய்மதி தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு தகவல் வழங்கிய அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “செய்மதி விவகாரத்தில் பல சிக்கல்கள் உருவாகியுள்ளன. ஒரு கல்லால் நாலாபுறமும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிவரும்,” என குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மேலும் கூறுகையில், பிரதமருக்கு வழங்கப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளதால், அதிகாரிகள் மீது விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. “பிரதமர் கோரும் தகவல்களை சரியாக வழங்குவது அதிகாரிகளின் கடமை. தவறான தகவல்களால் இந்த பிரச்சினை உருவானது,” என்றார்.
மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டம் குறித்து, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இதற்கு எதிர்ப்புகள் உள்ளதால் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.