புதியவர்களுக்கு வாக்களித்து பரிசீலித்து பார்ப்பதற்குரிய தருணம் அல்ல இது

0
71

மலையக பெருந்தோட்டப்பகுதிகளை கிராமங்களாக்கும் திட்டம் பற்றி சிலர் போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவற்றில் எவ்வித உண்மையும் இல்லை. ஏனைய கிராம மக்கள் எவ்வாறு உரிமைகளை அனுபவிக்கின்றனரோ அதேபோல உரிமைகள் நிச்சயம் கிடைக்கப்பெறும் – என்று இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் உரிய ஏற்பாடுகளுடன் அவர்கள் சிறுதோட்ட பங்குதாரர்களாக ஆக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து (04.09.2024) அன்று புஸ்ஸலாவ மற்றும் நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய, உப தலைவர் பாரத் அருள்சாமி தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் செல்லமுத்து, பிரதி தேசிய அமைப்பாளர் சசிகுமார், நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் இராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தால் ஊழல்வாதிகளைப் பாதுகாப்பார் எனவும், எல்லோருக்கும் வாக்களித்துவிட்டோம், இம்முறை அவர்களுக்கும் வழங்கிபார்ப்போமே என்ற கருத்தாடல்தான் கிராம மட்டங்களில் இன்று நிலவுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவரையும் பாதுகாக்கவில்லை. நாட்டையும், நாட்டு மக்களையும்தான் அவர் பாதுகாத்துள்ளார். குறுகிய காலப்பதிக்குள் அவர் தலைமையில்தான் ஊழல்களுக்கு எதிராக பல சட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. உரிய சட்ட ஏற்பாடுகள் இருந்தால் எவரும் தப்ப முடியாது. அதற்குரிய வழிகளை ஜனாதிபதி சிறப்பாக செய்துள்ளார். எனவே, ஊழல்வாதிகளை பாதுகாப்பார் எனக் கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும்.

அடுத்தது புதியவர்களுக்கு வாக்களித்து பரிசீலித்து பார்ப்பதற்குரிய தருணம் அல்ல இது. அவ்வாறு முயற்சித்தால் அது பாதக விளைவுகளை ஏற்படுத்தி மீண்டும் வரிசை யுகம் தோற்றம் பெறலாம். ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நாடாளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் என்பன நடைபெறவுள்ளன. அவற்றின்போது மாற்றம் பற்றி பரிசீலித்து பாருங்கள். உங்களுக்கு பிடிக்காத, மக்களுக்கு சேவை செய்யாத அரசியல்வாதிகளை நிராகரியுங்கள். ஆனால் ஜனாதிபதி தேர்தல் என்பது அவ்வாறு அல்ல. அதில் எவ்வித ஒத்திகையையும் பார்க்ககூடாது.

தோட்டங்களின் காணி உரிமை அரசு வசம் உள்ளது. கம்பனிகளுக்கு அது குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தமக்குரிய விடயங்களை செய்வதில் சட்டரீதியான தடைகள் உள்ளன. எனவேதான் தோட்டங்களை கிராமங்களாக்குவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. அவ்வாறு செய்துவிட்டு மக்களுக்கு காணி உரிமையை வழங்கிட்டால், தோட்ட நிர்வாகம் தலையிட முடியாது. தமக்குரிய காணியில் மக்கள் எதையும் செய்யலாம். கிராமத்துக்கென தகனசாலை, மைதானம் என ஏனைய கிராமங்களில் உள்ளவாறு எல்லாம் வரும். இது சுயாட்சிபோன்றதாகும். எனவே, தோட்டங்களை கிராமங்களாக்கும் திட்டம் பற்றி பரவும் போலி தகவல்களை நம்ப வேண்டாம்.” -என்றார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here