பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற்ற அடைய வேண்டும் -ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு!!

0
137

பெண்கள் தமது செயற்பாடுகளை அமைத்துக்கொண்டு, அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைய வேண்டும். அப்போது தான் சிறந்த ஒரு சமூகத்தை உருவாக்க முடியுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்த மகளிர் தின விழா 24.03.2018 அன்று நுவரெலியா நகர மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற பெண் உறுப்பினர்களுக்கு மாற்றுகட்சியினர் தொலைப்பேசி மூலம் அழைப்பெடுத்து சபைகளின் ஆட்சியை அமைக்காமல் இருப்பதற்கு 7 கோடி ரூபாய்க்கு பேரம் பேசியுள்ளார்கள்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பெண் உறுப்பினர்கள் கொள்கையுடன் இருப்பவர்கள். எவருக்கும் விலை போகமாட்டார்கள் என்பதை அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நாம் கலந்துரையாடியுள்ளோம். பிரதேச சபைகளில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக விசேடமாக நிதி தருவதாக கூறியுள்ளார். இதன்மூலம் எதிர்பார்த்த அபிவிருத்திகளை செய்துக்கொள்ளலாம்.

இம்முறை காங்கிரஸில் வெற்றிப்பெற்ற பெண் உறுப்பினர்கள் ஒரு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.

எதிர்வரும் காலங்களில் பெண்களுக்கு அரசியல் பிரவேசமாக மாகாண சபை மட்டுமல்லாது, பாராளுமன்றம் வரை செல்ல வாய்ப்புகள் வழங்கப்படும் என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here