பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் கலந்துரையாடல் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவரும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க தலைமையில் இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி செயலகத்தினால் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
இங்கு பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் தற்போதைய பௌதிக ரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதுடன், இதன்போது ஆணைக்குழு எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வாய்ப்பும் கிடைத்தது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் இணைப் பிரதித் தலைவர்களான சமிந்த்ராணி கிரியெல்ல, சமன்மலி குணசிங்க மற்றும் ஒன்றியத்தின் ஏனைய உறுப்பினர்களான ஹேமாலி வீரசேகர, லக்மாலி ஹேமச்சந்திர, நிலந்தி கொட்டஹச்சி, ஒஷானி உமங்கா ஆகியோர் பங்கேற்றதுடன், ஒன்றியத்தின் செயலாளர், இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாளர் உட்பட அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி செயலகம், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, தேசிய வரவுசெலவுத்திட்டத் திணைக்களம், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.




