பெருந்தோட்ட மக்களின் கூட்டு ஒப்பந்த விவகாரம் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது; இதொகா!

0
167

சர்வதேச தொழிற் சட்ட ஒப்பந்தங்களுக்கு முரணாக நடக்கும் முதலாளித்துவ பெருந்தோட்டக் கம்பனிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் 106வது வருடாந்த மகாநாட்டில் சட்டத்தரணி கா.மாரிமுத்து சூளுரை

இலங்கையில் பெருந்தோட்ட மக்களுக்கான கூட்டு ஒப்பந்த சரத்துக்களை அமுல்படுத்துவதில் சில தோட்டக் கம்பனிகள் அலட்சியமாக நடந்து கொள்வதால், மக்கள் பெரிதும் ஏமாற்றப்படுகின்றார்கள். சர்வதேச தொழிற் சட்டங்கள் இதனால் மீறப்படும் நிலை உருவாகியுள்ளது. தான்தோன்றித் தனமான செயற்பாடுகளை சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் கண்டிக்க வேண்டும் என இ.தொ.கா நிர்வாக உப தலைவரும், சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து ஜெனிவாவில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் 106வது வருடாந்த மகாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் இலங்கைக் குழுவின் தொழிலாளர் ஆலோசகராக கலந்து கொண்டு உரையாற்றும் போது சட்டத்தரணி கா.மாரிமுத்து மேலும் தெரிவித்துள்ளதாவது:-

கூட்டு ஒப்பந்தத்தில் முக்கிய அம்சங்களின்; ஒன்றான 140 ரூபா உற்பத்திக் கொடுப்பனவை வழங்காமல் இருக்கும் வகையில் பல விதமான உபாயங்களை கம்பனிகள் கையாள்கின்றன. குறிப்பிட்டளவு கொழுந்தினை பறித்தால் மட்டுமே உற்பத்தித்திறன் கொடுப்பனவை வழங்க முடியும் என்று கூறுவது மூலம் ஒப்பந்த சரத்து மீறப்படுகின்றது. இத்துடன், தோட்டங்கள் கைமாற்றப்படும்போது அது சம்பந்தமான விபரம் தொழில் சங்கங்களுக்கு அறிவிக்கப்படுவதில்லை.
இதனால் தொழிலாளர்களது ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்ற கொடுப்பனவுகள் பெறுவதில் பிரச்சனைகள் தோன்றுகின்றன. சர்வதேச தொழிற் சட்ட ஒப்பந்தங்களை மதிக்காது தோட்டக் கம்பனிகள் நடந்து கொள்வதால், தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதோடு ஒடுக்குமுறை வழிதோன்றுகின்றது என அவர் தெரிவித்தார்.

1919 ஆண்டு தொடக்கம் இன்றுவரை சர்வதேச தொழில் ஸ்தாபனம் தொழிலாளர் நன்மைக்காக எடுத்து வரும் முயற்சிகள் வீண்போகிவிடக் கூடாது என்பதற்காக விசேடமாக ஊ 87 மற்றும் ஊ 98 என்ற இரண்டு சர்வதேச தொழில் சட்ட ஒப்பந்தங்களையும் முறையாக எல்லா நாடுகளிலும் அமுல்படுத்த சர்வதேச தொழில் ஸ்தாபனம் ஸ்திர நடவடிக்கை எடுக்க வேண்டும். விசேடமாக தொழில் சட்டங்களை கடினமாக அமுல்படுத்துவதற்கு விசேட திட்டங்களை வகுக்க வேண்டும். மேற்கூறிய விடயங்களை அடிப்படை நியதிகளும், தொழில் உரிமைகளும் என்ற தலைப்பில் செயல்பட்ட குழுவில் கலந்து கொண்டு சர்வதேச தொழில் ஸ்தாபன கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இவ்வருடம் சர்வதேச தொழில் ஸ்தாபனத்தினால் மூன்று விடயங்களைக் குறித்து பிரேரனைகளும் நிறைவேற்றப்பட்டது. அடிப்படை நியதிகளும் தொழில் உரிமைகளும், தொழில் வாய்ப்புகளும் நியாயமான தொழில் முறைகளும் மற்றும் தொழில் இடமாற்றம் ஆகியவையே இவை ஆகும். இதன் அடிப்படையில், எதிர்வரும் காலங்களில் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள், தொழில் சங்க உரிமைகள், தொழில் வாய்ப்பு, தொழில் பாதுகாப்பு போன்ற பல நன்மைகளை தொழிலாளர் வர்க்கம் அடைய வாய்ப்பு ஏற்படுத்துகிறது. சர்வதேச ரீதியில் பெருந்தோட்ட மக்களின் விவகாரம் கொண்டு செல்லப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

187 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட சர்வதேச தொழில் ஸ்தாபனத்தில் இருந்து 313 அரசாங்க, 129 தொழிலாளர் மற்றும் 126 முதலாளிமார் ஆக மொத்தமாக 568 பிரதிநிதிகளும் மற்றும் 2025 அரசாங்க, முதலாளிமார் மற்றும் தொழிலாளர் ஆலோசர்களும் இம்முறை நடந்த 106 வது சர்வதேச தொழில் ஸ்தாபன சம்மேளனத்தில் பங்கு பற்றியது விசேட அம்சமாகும்.
எஸ்.தேவதாஸ்
ஊடக இணைப்பாளர்
இதொகா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here