பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் உள்ள 29 நிறுவனங்களினால் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம், அதன்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
தென்னைப் பயிர்ச்செய்கையின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக வர்த்தகப் பயிர்ச்செய்கைகொண்ட காணிகளை இனங்கண்டு அவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
புதிதாக தென்னைகளை பயிரிடுவதை விட, ஏற்கனவே உள்ள தென்னந் தோட்டங்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, குறை பயன்பாட்டைக்கொண்ட தனியார் தென்னந் தோட்டங்களை சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கு தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் கீழ் உள்ள பயன்படுத்தப்படாத காணிகளைப் பயன்படுத்துவதற்கான திட்டம் ஒன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.