லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால். மீளவும் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டமை பிரச்சினைக்குரியதாகும் என வலுசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், நேற்று நள்ளிரவு முதல் தமது சகல விதமான பெற்றோல் வகைகளின் விலைகளையும், 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விற்பனை விலை 303 ரூபாவாகும்.
அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விற்பனை விலை 332 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே, கடந்த முறை லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருட்களின் விலையை அதிகரித்தபோது, அதன் அதிகாரிகளை அழைத்து, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலையுடன் அதனை சமப்படுத்துமாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அது தொடர்பான ஒப்பந்தத்தை ஆராய்ந்து, அதில் தங்களுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுக்க முடியும் என்பது குறித்து ஆராயுமாறு தமது செயலாளருக்கு அறியப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் விலை தற்போது அதிகரிக்கப்பட மாட்டாது என வலுசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.