சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் ‘பேக்கோ சமன்’ என்பவரின் மனைவி மற்றும் குழந்தை நேற்று (29) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வந்தடைந்தபோது இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டனர்.
இந்தோனேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இருவரும், ஜகார்த்தாவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-365 மூலம் மாலை 5:50 மணியளவில் இலங்கைக்கு வந்தனர்.
இதனையடுத்து சிஐடி விமான நிலையப் பிரிவு உடனடியாக அவர்களைத் தடுத்து நிறுத்தி, முதற்கட்ட வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பில் உள்ள சிஐடி தலைமையகத்தில் ஒப்படைத்தது.
முன்னதாக, இந்தோனேசிய அதிகாரிகள்,ஜகார்த்தாவில் வைத்து பேக்கோ சமனின் முக்கிய சகாவான கெஹல்பத்தர பத்மேவையும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பலின் பல உறுப்பினர்களையும் கைது செய்தனர்.
அந்தச் சோதனையின் போது, பேக்கோ சமனின் மனைவி மற்றும் சிறு குழந்தையும் கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும், அந்தப் பெண் மீது கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாததால், அவரையும் குழந்தையையும் இலங்கைக்கு நாடு கடத்த இந்தோனேசிய அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.