சிறிலங்காவில் பொருட்களின் விலை குறைப்பின் பயனை மக்களுக்கு வழங்காத வர்த்தக நிலையங்களை அடையாளம் காண்பதற்கான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நுகர்வோர் அதிகார சபையின் சுற்றிவளைப்பு மற்றும் சோதனைப் பிரிவின் பணிப்பாளர் ரசல் சொய்சா இதனைத் தெரிவித்தார்.
”சிறிலங்கா ரூபாவின் பெறுமதி வலுவடைந்த நிலையில் அதற்கான பயன் நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும். எனினும் பிரதேச ரீதியாக மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை.
இதற்கு பிரதான காரணம் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாமையே. இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதுடன், மக்கள் அதிக விலைக்கு பொருட்களைக் கொள்வனவு செய்கின்றனர்.” என தெரிவித்தார்.