பொருட்களுக்கான தட்டுப்பாடு விரைவில் நீங்கும்.

0
129

” அரிசி, சீனி உட்பட நுகர்வுப் பொருட்களுக்கு ஏற்பட்டிருந்த தட்டுப்பாடு மற்றும் பிரச்சினைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டுள்ளன. ஏனைய பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும். அந்தவகையில் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகும்.” – என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம் இன்று (20.02.2022) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தமிழ், சிங்களப் புத்தாண்டு காலப்பகுதியில் தட்டுப்பாடின்றி மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான சூழலை உருவாக்குவதற்காக நிதி அமைச்சர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது. அந்த குழு வாராந்தம்கூடி நிலைமைகளை சீர்செய்துவருகின்றது.

கடந்த காலங்களில் இருந்த முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. அரிசி, சீனி மற்றும் சமையல் எரிவாயுவுக்கு இருந்த தட்டுப்பாட்டு நிலை சரிசெய்யப்பட்டுள்ளது. ஏனைய பொருட்களுக்கு இருக்கும் தட்டுப்பாட்டு நிலையும் சீர்செய்யப்படும். ஆக, எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் நியாயமான விலைக்கு பொருட்களை வாங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டே செயற்பட்டுவருகின்றோம்.

பெருந்தோட்ட மக்களுக்கு தற்போது மானிய விலையில் கோதுமை மா வழங்கப்படுகின்றது. எதிர்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது சம்பந்தமாகவும் ஆராயப்படும்.

தேயிலை ஏற்றுமதிமூலம் எமக்கு அந்நிய செலாவணி வருகின்றது. உலக சந்தையில் சிறந்த கேள்வி உள்ளது. இதற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களே பங்களிப்பு வழங்கிவருகின்றனர்.

அதேவேளை, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிக்கா அம்மையார், மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன போன்ற ஜனாதிபதிகளின்கீழ் தொண்டமான் குடும்பம் செயற்பட்டுள்ளது. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் மலையக மக்களுக்கு ஆற்றிய சேவைகளை மறந்துவிடமுடியாது. ரமேஷ் உள்ளிட்டவர்கள் அதற்கு உறுதுணையாக நின்றனர். தற்போது சிறந்த படித்த இளம் தலைவராக ஜீவன் தொண்டமான் செயற்பட்டுவருகின்றார். ” – என்றார்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here