” சில நாடுகளில்போல தனிக்கட்சி முறைமையை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சி இலங்கையில் வெற்றியளிக்காது.” – என்று முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது ரணில் விக்கிரமசிங்கதான் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டார். அவருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளித்தது. அந்த முடிவு தொடர்பில் இன்றும் நாம் பெருமையடைகின்றோம். ரணில் இட்ட சிறப்பான அடிதளத்தால்தான் இந்த அரசாங்கத்தாலும் பயணிக்க கூடியதாக உள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்தது. அவற்றை தற்போது நிறைவேற்ற முடியாதுள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியவில்லை. அதனால்தான் எதிரணிகளை முடக்கி தமது இருப்பை தக்க வைப்பதற்கு முயற்சிக்கின்றது.
தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்களே அக்கட்சியை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அரசாங்கம் செய்யும் தவறுகளை கண்டு நாம் அமைதி காக்கப்போவதில்லை. ஆட்சியை கவிழ்க்க முற்படவில்லை. ஆனால் தவறு நடந்தால் நிச்சயம் அவற்றை சுட்டிக்காட்டுவோம்.
எதிரணிகளை ஒடுக்கி தனிக்கட்சி ஆட்சியை முன்னெடுக்கவே முயற்சி எடுக்கப்படுகின்றது. ஆனால் இலங்கை போன்ற நாட்டில் அந்நிலைமையை ஏற்படுத்துவது கடினம்;.” – என்றார்.