பொலிஸில் காணப்படும் 5000 வெற்றிடங்களை நிரப்புவதற்கு விரைவில் – அமைச்சர் ஆனந்த விஜேபால!

0
4

இலங்கை பொலிஸில் சுமார் 28,000 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இவற்றில் 5000 வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்று உரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த வருடத்திற்குள் இவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். அத்துடன், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணியாற்றுபவர்களில் 10,000 பேரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் (22) பாராளுமன்றத்தில் கூடியபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார். கௌரவ அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பொலிஸ் சேவையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கௌரவ அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகளின் வினைத்திறனை அதிகரிப்பதற்குத் தேவையான பயிற்சித் திட்டங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பெண் பொலிஸார் 1000 பேரை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார். அடுத்த வருடத்தில் பொலிஸ் சேவைக்கென தனி சம்பளக் கட்டமைப்பை உருவாக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், இது குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டு 2026 வரவு செலவுத் திட்டத்திற்கு பொருத்தமான திட்டங்கள் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் நியாயமான விசாரணைகளை நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ள பொலிஸ் நிலையங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. அவை குறித்து விசேட கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குழுவின் தலைவர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கினார். விசேட சுற்றிவளைப்புக்களுக்காக வலான ஊழல் தடுப்புப் பிரிவு போன்ற ஊழல் தடுப்புப் பிரிவுகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார். சட்டவிரோத செயல்கள் குறித்து எவரும் 1997 என்ற எண்ணில் முறைப்பாடு செய்ய முடியும் என்றும்  அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள், சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களின் பயன்பாடு, சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்குபவர்களின் அடையாளங்களை வெளியிடாமல் இருப்பது போன்ற விடயங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள், குறித்த அமைச்சின் செயலாளர் டி.டபிள்யூ.ஆர்.பி.செனவிரத்ன உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here