பொலிஸ் சேவையை சுதந்திரமான, திறமையான, நட்புமிக்க, பொதுமக்களுக்கு நெருக்கமான சேவையாக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகுமெனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேலதிகப் படைத் தலைமையகத்தில் நேற்று (14) நடைபெற்ற இலங்கை பொலிஸ் துறையின் 84ஆவது பொலிஸ் பிரிவுகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு கூறினார்.
இலங்கை பொலிஸ் துறையின் 84ஆவது விளையாட்டுப் போட்டியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை குற்றப் புலனாய்வுப் பிரிவின் சச்சித்ரா ஜெயகாந்தன், சிறந்த வீரர்களான டி.ஜி.எஸ். விஜேதுங்க, A.M.N. பெரேரா, P.P. ஹேமந்த ஆகிய வீரர்களுக்கும், ஒட்டுமொத்தப் போட்டியின் பிரதமரின் சவால் கேடயத்தை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்புக்கான ஜனாதிபதியின் சவால் கேடயத்தை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படைக்கும் பிரதமர் வழங்கிவைத்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,
விளையாட்டு என்பது, பங்கேற்றல் மற்றும் வெற்றி ஈட்டுதல் மாத்திரமல்ல, ஆரோக்கியமான, ஒழுக்கமான மற்றும் புத்திசாலித்தனமான சமுதாயத்தை உருவாக்குவதற்கும் மிகவும் முக்கியமானதாகும்.
வெற்றி புகழையும், நன்மதிப்பையும் பெற்று தருகின்ற அதேவேளை பங்கேற்றல் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கி, ஒழுக்கமான, வலிமையான ஆளுமையும் சிறந்த மனப்பான்மையும் மிக்க மனிதர்களை உருவாக்குகின்றது.
பொதுமக்களுடன் பணியாற்றும் பொலிஸ் சேவைக்கு ஒழுக்கம், ஆளுமை மற்றும் சிறந்த மனநிலை இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஆகையினால், பொலிஸ் பிரிவுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி தேசிய மட்டத்திலான வீரர்களை உருவாக்குவதற்கும், உங்களது தொழிலின் கௌரவத்தையும் மேம்படுத்துவதற்கும், தொழில்சார் மதிப்பை மேம்படுத்துவதற்கும் உதவும் என நான் நம்புகிறேன்.
இலங்கையைப் போன்ற கனவுகள் சிதைந்திருந்த ஒரு நாடு விளையாட்டுத் துறையில் சாதிக்கக்கூடிய பல விடயங்கள் இருந்த போதிலும், சர்வதேச விளையாட்டு அரங்கில் இலங்கை மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது என்பதை இவ்வேளையில் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். கடந்த காலத்தில், நமது நாட்டின் கிரிக்கெட் விளையாட்டு குறிப்பிடத்தக்க மட்டத்தில் இருந்தது. ஆயினும் அண்மித்த வரலாற்றில் கிரிக்கெட் விளையாட்டும் ஒருவித பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது.
விளையாட்டின் முன்னேற்றத்திற்காக, நாட்டிற்கு பெருமையையும் புகழையும் தேடித்தரும், ஆரோக்கியமான ஒழுக்கமான குடிமக்களை உருவாக்கும் விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கியம் பற்றிய கொள்கையை அமுல்படுத்துவது எமது அரசாங்கத்தின் ஒரு நோக்கமாகும்.
பொலிஸ் சேவையைப் பற்றி ஒரு சில கருத்துக்களை முன்வைக்கவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நான் விரும்புகிறேன். நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதில், பொதுமக்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு நிறுவனமாக பொலிஸ் துறை மிக முக்கியமான பணியை ஆற்றி வருகின்றது.
சட்டத்தின் ஆதிக்கம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை சமூகத்திற்கு எடுத்துக்காட்டும் மிக முக்கியமான அம்சம் பொலிஸ் துறையின் சுயாதீனமான செயல்திறன் மிக்க செயற்பாடே ஆகும். ஆயினும், இலங்கை பொலிஸ் துறை பற்றிய பொதுவான கருத்து என்னவென்றால், அரசியல் அல்லது வேறுவிதமான சமூகத் தொடர்புகளோ பண உதவியோ இன்றி சேவையைப் பெற முடியாத ஒரு நிறுவனம் என்பதேயாகும். அந்த கருத்தை மாற்றுவதற்கு உங்கள் ஒழுக்கம், சட்டத்திற்குக் கட்டுப்படுதல் மற்றும் நியாயமான முறையில் கடமைகளைச் செய்வது மிகவும் அவசியமாகின்றது.
அதேபோன்று, சில பொலிஸ் அதிகாரிகள் அரசியல் தலையீடுகளுக்கு ஆளாக நேர்ந்ததால் உரிய அங்கீகாரம் கிடைக்கப்பெறாது பாதிக்கப்பட்டிருந்தார்கள். தற்போதைய அரசாங்கம் எந்த விதத்திலும் உங்கள் சேவையில் தேவையற்ற செல்வாக்கைச் செலுத்தவோ, தலையிடவோ செய்யாது. ஆகையினால், உங்கள் அனைவருக்கும் நியாயமான முறையில் சட்டத்தை சுதந்திரமாக அமுல்படுத்துவதற்கு எந்தத் தடையும் ஏற்படப் போவதில்லை. அந்த நம்பிக்கையை கட்டி எழுப்புவதற்கு உங்களுக்கு ஒரு வரலாற்று ரீதியிலான வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.
பொலிஸ் சேவையை சுயாதீனமான, செயல்திறன் மிக்க, நட்பு ரீதியிலான, பொதுமக்களுக்கு நெருக்கமான ஒரு சேவையாக மாற்றுவதே எமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
அந்த எதிர்பார்ப்பை வெற்றிகரமாக நிறைவேற்றி, உங்கள் தொழிலை சமூகத்தால் அங்கீகரிக்கப்படும், மக்களின் அங்கீகாரத்தைப் பெற்ற ஒரு தொழிலாக மாற்றி அமைப்பதற்கு விளையாட்டின் மூலம் பெறப்படும் ஒழுக்கம், பொறுமை, ஒற்றுமை மற்றும் மன ஒருமைப்பாடு ஆகியவை மிக முக்கியமானவை என்பதை நினைவுபடுத்திய பிரதமர் அவர்கள், மக்களின் நம்பிக்கையை வென்ற ஒழுக்கமான, சுயாதீனமான பொலிஸ் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயல்படவும். என பிரதமர் கேட்டுக்கொண்டார்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமாரகமகே, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரீ, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர் அருண பண்டார, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் வழக்கறிஞர் ரங்க திசாநாயக்க, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், வீர வீராங்கனைகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.