இந்த போலி முத்திரை மதுபானம் தயாரிக்கப்படும் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டு , அங்கு போலி முத்திரைகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
நாட்டின் பல பகுதிகளில் உள்ள 25 மதுபானக் கடைகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது போலி முத்திரைகள் பதித்த 8000 மதுபானப் போத்தல்களை மதுவரித் திணைக்களம் கண்டுபிடித்துள்ளதாக இலங்கை மதுபான உரிமம் வழங்கும் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நுவரெலியா – நானுஓய , ரிக்கில்லகஸ்கட , இரத்தினபுரி, தங்கல்ல மற்றும் அம்பலாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த போலி முத்திரைகள் தயாரிப்பின் பின்னணியில் மதுவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் அஜித் உடுகம தெரிவித்தார்.
மதுபான போத்தல்களில் ஒட்டப்படும் வழக்கமான முத்திரைகளில் 10 இலக்கங்களிலான குறியீட்டு எண் காணப்படும் நிலையில் அதனை ஒத்த நிலையில் குறித்த போலி முத்திரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த போலி முத்திரை மதுபானம் தயாரிக்கப்படும் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டு , அங்கு போலி முத்திரைகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, மதுவரித் திணைக்களமும் மற்றும் தொடர்புபப்பட்ட மதுபான உற்பத்தி நிறுவனமும் இணைந்து இதனை மேற்கொண்டுள்ளதாக அஜித் உடுகம தெரிவித்தார்.
மேலும், அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரியை தவிர்க்கும் வகையில் போலி முத்திரை ஒட்டப்படுவதுடன், அதன் இலாபமானது மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.