ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே இருவரும் அரைசதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 141 ஓட்டங்களை பெற்றனர்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியுடன் சென்னை அணி ப்ளே ஓப் சுற்றுக்கான தனது இடத்தை உறுதிசெய்துள்ளது.
224 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் தோல்வியை சந்தித்துள்ளது.
டெல்லி அணியின் தலைவர் டேவிட் வார்னர் மட்டுமே சிறப்பாக துடுப்பெடுத்தாடி 57 பந்துகளில் 86 ஓட்டங்களை பெற்றிருந்தார். இது இந்த தொடரில் வார்னர் பெற்றுக்கொண்ட ஆறாவது அரைசதம் ஆகும்.
சென்னை அணிக்காக தீபக் சாஹர் மூன்று விக்கெட்டுகளையும், மதீஷ பத்திரன மற்றும் மதீஷ தீக்ஷன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே இருவரும் அரைசதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 141 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.
கெய்க்வாட் 50 பந்துகளில் 79 ஓட்டங்களையும், ஷிவம் துபே 9 பந்துகளில் 22 ஓட்டங்களையும், டெவோன் கான்வே 52 பந்துகளில் 75 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
டெல்லி அணி சார்பில் கலீல் அகமது, அனிர்ச் நார்ட்ஜே மற்றும் சேத்தன் சகாரியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.