மலையகத்தின் அபிவிருத்தி பணிகளை உரிய நேரத்தில் உரிய மக்களுக்கு வழங்குவது இ.தொ.கா மாத்திரமே.சௌமியமூர்த்தி தொண்டமான் தொடக்கம் இன்று ஜீவன் தொண்டமான் வரை மக்களின் நிலையறிந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.ஆனால் வெறும் அல்லக்கைகளை வைத்து விமர்சன அரசியலை கொண்டு செல்கின்றது தொழிலாளர் தேசிய சங்கமென இ.தொ.காவின் உபச்செயலாளர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகின்ற போது மானிய முறையில் மாவு வழங்கியதற்கு திகாம்பரமும் அவரின் சகாக்களும் பல விமர்சனங்களை தொடுத்து வருகின்றனர்.எத்தனை காழ்ப்புணர்ச்சி இருந்தால் இவ்வாறான விமர்சனங்களை முன்வைக்க முடியும்.நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் மலையக மக்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.இவ்வாறு இருக்கையில் மானிய முறையில் மாவினை வழங்கியமைக்கு வாழ்த்து தான் தெரிவிக்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல் இ.தொ.காவிற்கு மாத்திரம் மானிய முறையில் மாவு வழங்கப்படவில்லை அனைத்து தோட்டத்தொழிலாளர்களுக்குமே பாரபட்சமின்றி வழங்கப்பட்டது.
ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் வழங்கப்பட்ட வீடுகள் கட்சி உறுப்பினர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டது.வழங்கப்பட்ட வீடுகளின் தரம் குறைக்கப்பட்டதோடு பூர்த்தி செய்யப்படாமலும் வழங்கப்பட்டது.நல்லாட்சி அரசாங்கத்தில் கட்டப்பட்ட வீடுகளின் உட்கட்டமைப்பு வசதிகளை கூட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானே தற்போது பூர்த்தி செய்து வருகின்றார்.
களத்தில் நின்று வேலை செய்பவர்களுக்கே மக்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொள்ள முடியும். இ.தொ.கா களத்தில் நின்று வேலை செய்கின்றது திகாம்பரம் போல கொழும்பில் தஞ்சம் புகுந்து கொண்டு முகநூலிலும் ஊடகத்திலும் மாத்திரம் வாய் சவடால் விடவில்லையென சச்சுதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.
மலையக மக்களின் அபிலாஷைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் அதற்கு ஜீவன் தொண்டமான் தலைமையிலான திடமான தலைமைத்துவத்தின் கீழ் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் முடிந்தால் விமர்சன அரசியலை தவிர்த்து வேடிக்கை அரசியலை முன்னெடுக்குமாறு தொழிலாளர் தேசிய சங்கத்தை இ.தொ.கா உபச்செயலாளர் சச்சுதானந்தன் எச்சரித்துள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்