மத்தளம் அடிப்பது போல் நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்கும் அரசு.

0
179

நாட்டில் பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டுவருவதால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு, வாழ்க்கைச்செலவும் உச்சம் தொட்டுள்ளது,என, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்….

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக பொருளாதார ரீதியிலும்,உளவியல் ரீதியிலும் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் இத்தொடர் விலையேற்றம் குறித்து மக்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளதோடு, அரசுமீது விமர்சனக் கணைகளையும் தொடுத்துவருகின்றனர்.

சீனி,பால்மாவின் விலை ஏற்கனவே அதிகரித்திருந்த நிலையில், நேற்றிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.இச் செயற்பாடு தொடருமானால் மக்கள் பொருளாதார நெருக்கடியில் பசி பட்டினியால் வதைபடும் காலம் தொலைவில் இல்லை.

இதிலும் குறிப்பாக பெருந்தோட்ட மலையக மக்களின் நிலை பெரும் அவலத்திற்குறியதாகும், அரசாங்க வர்த்தமானி அறிக்கையின் ஊடாக அதிகரிக்கப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் வேதனக் கொடுப்பனவு விடயத்தில், பெருந்தோட்ட நிர்வாகங்களினால் தொடர்ந்தும் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

தொழிலாளர்களின் தொழில் பிணக்குகளுக்கு கூட பொலிஸ் நிலையத்தை நாட வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை, பெருந்தோட்ட காணிகள் வெளியாரின் மூலம் ஆக்கிரமிப்புக்கு என பல வழிகளிலும் எம் மக்களை வதைக்கின்றனர்.

முழு நாடுமே முடக்கப்பட்டிருந்த சூழ் நிலையிலும் கூட , பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் உயிரை துச்சமென எண்ணி நாட்டினுடைய பொருளாதாரத்தை முதுகில் சுமந்து கொண்டு தொழிலுக்குச் சென்றார்கள்.

இருந்த போதிலும் இன்று வரை எம் உறவுகளின் இருப்பும் புயலில் அகப்பட்ட காற்றாடி போல ஸ்திரமின்மையாகவுள்ளது.ஒரு பக்கம் வேலையின் அளவு அதிகரிக்கப்பட்டு வேலைநாட்கள் உயர்ந்துள்ளது,அதிலும் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை.

இவற்றையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என எம் மக்களை குறிவைத்து வஞ்சிக்கின்றது இவ் அரசாங்கம். இதையெல்லாம் பார்க்கும் போது மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி, நாட்டு மக்களின் வயிற்றில் பல பக்கத்திலும் அடி போல ஆகிவிட்டது.

எது எவ்வாறாயினும் எம் மக்களின் இவ் அவல நிலைக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பது நிதர்சனமிக்க உண்மை என வடிவேல் சுரேஷ் எம்.பி தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here