ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று முன்தினமிரவு ஈரானின் உளவுத்துறை அமைச்சர் கதிப் கொல்லப்பட்டதாக கட்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஈரான் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இதேவேளை ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியை இஸ்ரேல் படுகொலை செய்ததற்குப் பதிலடியாக, கொத்துக் குண்டுகளால் இஸ்ரேலின் மீது பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் நேற்று புதன்கிழமை 19 ஆவத நாளைக் கடந்த நிலையில், இந்த பயங்கர தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. ஈரானிய அரசு தொலைக்காட்சியில் தாக்குதல் தொடர்பிலான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் நேற்று முன்தினமிரவு அதிக மக்களுள்ள டெல் அவிவ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம், இந்தப் போரினால் இஸ்ரேலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 14 ஆக உயர்ந்துள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. போரின் விளைவுகள் உலகளவில் உணரப்படும் என்றும், ‘ செல்வம், மதம், இனம் ஆகிய பாகுபாடின்றி அனைவரையும் பாதிக்கும்’ என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய பெய்ரூட்டில் நடந்த இஸ்ரேலின் தாக்குதலில், ஹிஸ்புல்லாவின் அல் மனார் தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சிகளின் இயக்குநர் அவரது மனைவியுடன் கொல்லப்பட்டதாக அத்தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ‘பெய்ரூட்டில் உள்ள ஸுகாக் அல்-பிளாட் பகுதியில் நடந்த சியோனிஸ்டுகளின் தாக்குதலில், தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சிகளின் பணிப்பாளர் முஹமது ஷெர்ரியும் அவரது மனைவியும்’ கொல்லப்பட்டதாகவும் அவரது குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அல் மனார் தெரிவித்துள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரான் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இஸ்ரேலும் அமெரிக்காவும் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதலுக்கு உள்ளான இடங்களில், ஈரானின் மேற்கில் உள்ள லோரெஸ்தான் மாகாணம் மற்றும் ஹமேதான் நகரம், அத்துடன் தெற்கில் உள்ள ஃபார்ஸ் மாகாணம் ஆகிய பகுதிகளும் அடங்கியுள்ளன. இவேவேளை ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. பதுங்கு குழிகளை ஊடுருவும் திறன் கொண்ட சக்திவாய்ந்த குண்டுகளைக் கொண்டு ஹோர்முஸ் ஜலசந்தி நெடுகிலும் உள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் எக்ஸ் தள பதிவில், ஜலசந்தியின் ஈரானிய கடற்கரையோரம் உள்ள ‘பலப்படுத்தப்பட்ட ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது, 5,000 பவுண் எடை கொண்ட பல ஆழ்துளை ஊடுருவும் வெடிமருந்துகளை அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.




