மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) சட்டமூலத்திற்கு ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அனுமதி!

0
45

ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கருத்திற்கொள்ளப்பட்ட மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) சட்டமூலத்திற்கு அக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

இக்குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக்க தலைமையில் அண்மையில் (22) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

இந்த சட்டமூலத்தை முன்வைப்பது குறித்து கருத்துத் தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள், வர்த்தக மத்தியஸ்தம் சம்பந்தமான ஒரு நிலையத்தை நிறுவும் நோக்குடன் விசேடமாக உருவாக்கப்பட்ட 2000 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க இலங்கை வர்த்தக மத்தியஸ்த நிலையைச் சட்டத்தை, சில தொழில்நுட்ப காரணங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளதாகச் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, அந்தச் சட்டத்தை நீக்குதல், வர்த்தக மத்தியஸ்தத்தை நடத்துவதற்கான குறைந்தபட்ச தரநிலைகளை உள்வாங்குதல் மற்றும் அத்தகைய ஒழுங்குவிதிகளுக்கு உட்பட்டு நீதிமன்றக் கட்டமைப்பு மூலம் மத்தியஸ்தத் தீர்ப்புக்களை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் உள்ளிட்ட நோக்கங்களுடன் ஒரு புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பிற்குள் பிணக்குகள் தீர்வுக்கான மாற்றுப் பொறிமுறையாக கட்டாய மத்தியஸ்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், தன்னார்வ மத்தியஸ்தத்தைப் பொறுத்தவரையில் அதன் பயன்பாடு குறைவாகவே உள்ளது என்று அமைச்சின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.

மத்தியஸ்த உடன்படிக்கை ஒன்றுக்கு வருதல் அல்லது அத்தகைய உடன்படிக்கை இல்லாத நிலையில் பிணக்கு சம்பந்தப்பட்ட ஒரு தரப்பினர் தன்னார்வமாக முன்வந்து மத்தியஸ்தத்தை நாடும் போது அல்லது நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள் தொடர்பான தன்னார்வ மத்தியஸ்தத்துக்கான ஒரு சட்டரீதியான கட்டமைப்பை அறிமுகப்படுத்துவது முக்கியம் என்றும், இதன் மூலம் சிறந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், நாட்டின் குடியியல் மற்றும் வர்த்தகத் துறைகளில் அர்த்தமுள்ள வளர்ச்சி ஏற்படும் என்றும் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், தன்னார்வ மத்தியஸ்தம் மூலம் சட்டக் கட்டமைப்புக்கு ஒரு மதிப்புமிக்க சேவை வழங்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி.ஜி. பொன்னம்பலம், முஜிபுர் ரஹுமான், எம்.கே.எம். அஸ்லம், சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, (வைத்தியர்) செல்லத்தம்பி திலகநாதன் மற்றும் சந்தன சூரியஆரச்சி ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here