மலையக அதிகார சபையை வர்த்தமானியில் அறிவித்தும் இன்னும் நடைமுறை படுத்தாமல் இருப்பது ஏன்? என மஸ்கெலியா முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அசோக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையின் பெருந்தோட்டப் பிராந்தியத்தில் புதிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை’ (மலையக அபிவிருத்தி அதிகாரசபை) சட்டமூலம் பற்றி நாம் அனைவரும் கட்டாயம் அறிந்துவைத்துகொள்ளவேண்டும்
மலையகப் பகுதிகளில் நிர்வாகக்கட்டமைப்பு என்பது உரிய வகையில் செயற்படாததற்கு இத்தகையதொரு சபையின்மையும் பிரதான காரணமென்று கூறலாம். மலையக மக்களின் நலன்கருதி வழங்கப்படும் நிதியுதவிகள் கூட கட்சி சார்ந்த கணக்குகளிலேயே வைப்பிலிடப்பட்டன. உறுதிவகையில் கணக்கு காட்டப்படுவதுமில்லை. இருக்கின்ற ஒரு நிதியமும் ‘குடும்பநலன்’ சார்ந்ததாகவே இருக்கின்றது.
பெருந்தோட்டப் பிராந்தியத்தில் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திமூலம் பெயர் குறிக்கப்பட்ட இடப்பரப்புகளிலுள்ள பெருந்தோட்டச் சமுதாயத்தினரைச் சமூக நீரோட்டத்தினுள் சேர்ப்பதனை உறுதிபடுத்தல்.
பெருந்தோட்டச் சமுதாயத்தினர், தேசிய அபிவிருத்தி செய்முறைக்குப் பங்களிப்பதனை இயலச் செய்யும் பொருட்டு சமுகரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அவர்களுக்குத் தத்துவமளித்தல்.
அதிகாரசபையானது, இச்சட்டத்தின்கீழான அதன் தத்துவங்களையும், கடமைகளையும், பயணிகளையும் பயனுள்ள வகையில் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் அதனை இயலச்செய்வதற்கு – ஓர் அரசாங்கத் திணைக்களம், உள்ளுரதிகாரசபை, ஒரு பகிரங்கக் கூட்டுத்தாபனம் அல்லது வேறெதேனும் தனியார் அல்லது பகிரங்க நிறுவனம் உள்ளடங்கலாக எவரேனுமாளுடன் ஒப்பந்தங்களை அல்லது உடன் படிக்கைகளை செய்துகொள்ளுதல்.
இலங்கையினுள் அல்லது இலங்கைக்கு வெளியேயுள்ள ஆட்களிடமிருந்து அல்லது ஆட்கள் குழுக்களிடமிருந்து காசாக அல்லது வேறுவகையாக மானியக்கொடைகளை, கொடைகளை அல்லது நன்கொடைகளை ஏற்றுக்கொள்ளலாம் என்பதுடன், இச்சட்டத்தின்கீழான அதன் பணிகளை நிறைவேற்றுவதிலும் அவற்றைப் பயன்படுத்தலாம்.
அதிகார சபையினால் தீர்மானிக்கப்படக்கூடியவாறாக ஏதேனும் அரச வங்கியில் அல்லது அரச நிதி நிறுவனத்தில் நடப்பு, சேமிப்பு அல்லது வைப்புக் கணக்குகளைத் திறந்து பேணலாம்.
அதிகாரசபையின் நோக்கங்களுக்காக உடனடியாகத் தேவைப்படாத எவையேனும் நிதிகளை அரச வங்கிகளிலும் அரச நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்யலாம்.இவ் அதிகார சபையின் ஊடாக பல நன்மைகள் மக்களுக்கு காணப்படுகின்றது.அவை கிடைக்க வேண்டுமெனில் மலையக அதிகார சபை நடைமுறைக்கு வர வேண்டும் எனவே விரைவில் மலையக அதிகார சபையை நடைமுறைக்கு கொண்டு வருமாறு ராஜ் அசோக் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்