1931 ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமையின் கீழ் இலங்கை வாக்குரிமை பெற்ற இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்களின் வாக்குரிமையை 1948 ஆண்டு சுதேச அரசாங்கம் பறிக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றிய போது, அப்போது எமது மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த ஏழு பேரில் ஒருவரான ஜோர்ஜ் ஆர் மோத்தா அதற்கு எதிராக உரத்து குரல் எழுப்பியவராவார். அவரின் நினைவாகவே கோர்டலோஜ் போர்ட்சூட் தோட்டத்தில் அமைக்கப்படும் புதிய கிராமத்துக்கு “ மோத்தாபுரம்” என பெயரிட்டு கௌரவம் செய்கின்றோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
நுவரலியா, கந்தப்பளை போர்ட் சூட் தோட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட புதிய கிராமம் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இந்த வீடமைப்புத்திட்டம் சர்வதேச புகழ் பெற்றது. இலங்கையின் உயர்ந்த மலையான பீதுருதலாகாலை அடிவாரத்தில் இது அமையப் பெறுகிறது. இங்கே காற்று பலமாக வீசும். இந்த வீடுகள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அந்த வீடுகளின் கூரைகள் காற்றில் வீசுபட்ட காட்சியை செய்வதற்கு வேலையற்ற எதிர்க்கட்சியினர் படம் பிடித்து எம்மை விமர்சனம் செய்தனர். அதனை இணையத்தில் பார்த்த முகநூல் போராளிகளும் அமெரிக்காவிலும் லண்டனிலும் இருந்து கொண்டு எங்கள் மீது கேள்வி கணை தொடுத்தார்கள். அவர்களைவிட எமக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை செய்யும் ஆர்வமும் அர்ப்பணிப்பும் எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் எமது மக்களுக்காக வாக்கு கோரி அதனைப் பெற்று சேவை செய்து வருகிறோம். வாக்களித்த மக்களுக்கு கேள்வி கேட்பதற்கு உரிமை உண்டு. ஆனால், தன் தாய் நாட்டில் இருந்து தனது வாக்குரிமையை பயன்படுத்மாதவர்கள் பார்வையாளர்களாக இருக்கலாமே தவிர எங்களை விமர்சிக்க எந்த அருகதையும் அற்றவர்கள். அவ்வாறு அவர்கள் விமர்சிக்க வேண்டுமெனில் இலங்கைக்கு வாருங்கள் தேர்தலில் எமக்கு வாக்களியுங்கள். அப்போது எம்மை கேள்வி கேட்க உங,களுக்கு உரிமை உண்டு. கூரை கழன்ற ஊர் எங்கே இருக்கிறது எனக் கேட்டால் அவர்களுக்கு இந்த ஊரின் பெயர் கூட தெரியாது. இங்கே உள்ள காலநிலை, காற்றின் வேகம், இட அமைவு எதுவும் தெரியாது. முகநூலில் ஏதோ ஒரு படத்தைக் கண்டவுடன் அவர்களுக்கு வரும் சமூக அக்கறை ஆச்சரியப்பட வைக்கிறது. முகநூல் மாத்திரம் இல்லை என்றால் சிலருக்கு உலகமே தெரிந்திருக்காது. அதுதான் அவர்கள் உலகம்.
இன்று முழுமையாக அமைக்கப்பட்ட இந்த கிராமத்தை பெற்றுக் கொள்ளும் இந்த ஊர் மக் கள் எமக்கு வாக்களித்தன் பயனை பெற்றுக் கொள்கிறார்கள் . இந்த வாக்குரிமையைப் பெற எமது மக்கள் பிரதிநிதிகள் பல போராட்டங்களை நடாத்தியுள்ளனர். அன்று எமது வாக்குரிமை பறிக்கப்படும்போது 1947 ல் எம்மை பிரதிநிதித்துவப்படுத்தி ஏழு உறுப்பினர்கள் பாராளுமன்றில் அங்கம் வகித்தனர். கே.ராஜலிங்கம், சி.வி.வேலுப்பிள்ளை, சௌமியமூர்த்தி தொண்டமான், கே.குமாரவேல், கோ. ராமானுஜம், எஸ்.எம்.சுப்பையா, ஜோர்ஜ் ஆர்.மோத்தா ஆகியோரே அந்த ஏழு பேருமாவார். அன்றைய ஹன்சாட் அறிக்கைகளை பார்த்தால் குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்ட விவாதத்தில் அதிகமாக கலந்து கொண்டு எமது மக்களுக்காக இழைக்கபடுகின்ற அநீதிக்காக அவர் குரல் கொடுத்த விதம் பதிவாகியிருப்பதை அவதானிக்கலாம். அன்றே அவர் ஏனையோரை விட வயதில் மூத்தவராக இருந்தார். மத்திய இந்தியர் சங்கம் என சங்கம் அமைத்து அவருக்கும் சிரேஷ்டர்களாக மக் கள் மன்றத்தில் அங்கம் வகித்த பெரி.சுந்தரம், ஐ.எக்ஸ்.பெரைரா ஆகியோரோடும் எம்.எம் தேசாய் போன்றவர்களோடும் இணைந்து மக்கள் பணியாற்றியவர்.
இவரது பெயர் பின்வந்தவர்களால் திட்டமிட்டு மறக்கடிக்கப்படது. வீதியானாலும், பாலமானாலும், பாடசாலை ஆனாலும், மண்டபம் ஆனாலும், வளைவானாலும், நுழைவானாலும் ஒரே பெயரை வைத்து அதன் மூலம் அரசியல் லாபம் தேடும் முயற்சியே இடம்பெற்றது. அதனை நாங்கள் மாற்றியமைத்துள்ளோம். எமது சமூகத்துக்காக குரல் கொடுத்த பாடுபட்ட உண்மையான ஆளுமைகளின் பெயர்களை இதய சுத்தியோடு நினைவுகூர்ந்து வருகின்றோம். அந்த வகையிலேயே முன்னாள் நுவரெலியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் ஆர் மோத்தா பெயரில் “ மோத்தா புரம்” என இந்த கிராமத்துக்கு பெயரிடுபுன்றோம். இனி இந்த கிராம மக்கள் தமது முகவரியை மோத்தாபும் என மாற்றி அமைத்து அவரைப் பெருமைபடுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நோர்ட்டன்பிரிட்ஜ் நிருபர்.