மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

0
137

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எனவே, உறுதிமொழியை மீறும் விதத்தில் காங்கிரஸ் செயற்படாது.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சமூர்த்தி உதவி பெரும் 100 குடும்பங்களுக்கு அதிகரிக்கப்பட்ட சமூர்த்தி உதவி கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு 14.02.2022 அன்று அட்டன் டிக்கோயா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் தலைமை தாங்கி நடத்திய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன் மக்கள் மத்தியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசு எத்தகைய நல்ல விடயங்களை செய்தாலும் அதனை விமர்சித்து, குறைகூறும் விதத்திலான அரசியலையே எதிரணிகள் நடத்திவருகின்றன. மலையகத்திலுள்ள கட்சிகளும் அப்படிதான். பதவிகள் கிடைக்கவல்லை என்பதற்காக போலி பரப்புரைகளில் ஈடுபட்டுவருகின்றன. அவற்றை பொருட்படுத்தாமல் நாம் மக்களுக்கு சேவையாற்றிவருகின்றோம். மக்களுக்கும் இது புரியும்.

கோதுமை மா விலை அதிகரிக்கப்படும்போது, பெருந்தோட்ட மக்களே உணவுக்காக அதிகளவு கோதுமை மாவை நுகர்கின்றனர். எனவே, அம்மக்களுக்கு சலுகை விலையில் கோதுமை மா வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இது தொடர்பில் எமது பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சு நடத்தினார். அதன் பலனாக 80 ரூபாய்க்கு கோதுமை மா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் மலையக மக்கள் யாசகர்களா, எதற்காக கோதுமை மா வழங்கப்படுகின்றது என மலையகத்திலுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விமர்சிக்கின்றனர். இப்படி குறைகூறி அரசியல் நடத்துவதே அவர்களின் நோக்கம் என்பது இதன்மூலம் உறுதியாகின்றது.

ஆயிரம் டொன் மாவு தேவைப்படுகின்றது. தற்போது அவை பகிரப்பட்டுவருகின்றன. எனவே, விரைவில் அத்திட்டம் வெற்றிகரமாக இடம்பெறும். அன்று நல்லாட்சியின்போது 50 ரூபாவைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாமல்போனவர்களே இன்று விமர்சன அரசியல் செய்கின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின்கீழ் மலையக மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிச்சயம் நாம் நிறைவேற்றுவோம். தற்போது ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டுவருகின்றன. மலையக உதவி ஆசிரியர் பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு கிட்டும்.” – என்றார்.

க.கிஷாந்தன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here