மலையக மக்களும் சம உரிமை பெற்றவர்களாக வாழும் நிலை சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சியில் உதயமாகும்

0
69

மலையக மக்களும் சம உரிமை பெற்றவர்களாக வாழும் நிலை சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சியில் உதயமாகும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து, நுவரெலியா – தலவாக்கலையில் 08.09.2024 அன்று மதியம் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இதில் உரையாற்றும் போதே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவுடன் முதன்முறையாக நாம் உடன்பாடு செய்துள்ளோம். இதன்மூலம் எமது மலையக மக்களும் அனைத்து உரிமைகளையும் பெற்றவர்களாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும். இரண்டாவது குடிமக்களாக அல்லாமல் ஏனையோர்போல் வாழும் நிலை ஏற்படும். இதன் அடிப்படையிலேயே சஜித் பிரேமதாசவை ஆதரித்துள்ளோம்.

நல்லாட்சி காலத்தில்கூட நாம் போராடியே உரிமைகளை வென்றோம். எனினும், நாம் விரும்பும் ஆட்சியாக சஜித் ஆட்சி அமையவுள்ளது. அந்த ஆட்சியில் தமிழ் முற்போக்கு கூட்டணி பலமான பங்காளிக்கட்சியாக இருக்கும். நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் எமது கூட்டணியே முன்னிலையில் இருக்கின்றது. எனவே, ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவது உறுதி.

எமது மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும். நாள்கூலி முறைமை ஒழிக்கப்படும். சமத்துவம் உள்ள மக்களாக நாம் வாழும் நிலை உருவாகும். இது விடயத்தில் நாம் மிகவும் அவதானத்துடன் செயற்படுகின்றோம்.

நாம் சலுகைகளுக்காக அல்ல, எமது மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காகவே நாம் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்துள்ளோம். எமது மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்படுவார்கள். சம உரிமை பெற்றவர்களாக வாழ்வார்கள். காணி உரிமை நிச்சயம் வழங்கப்படும்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here