மலையகத்தில் 20 சதவீத பகுதிகளில் மண்சரிவு அச்சுறுத்தல்!

0
214

மலையகத்தில் 20 சதவீதமான பகுதிகளில் மண்சரிவு அச்சுறுத்தல் இருப்பதாக இடர் முகாமைத்துவ அமைச்சு கூறுகின்றது.

தேசிய கட்டிட ஆய்வு மையத்தினால் இந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டு வரைபடம் ஒன்றை தயாரித்து, மக்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலைத் திட்டமொன்று பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுவதாக இடர் முகாமைத்துவ அமைச்சரான அனுர பிரியதர்ஷன யாப்பா பிபிசியிடம் தெரிவித்தார்.

அடையாளம் காணப்பட்டுள்ள இடங்கள் அனைத்திலும் மண்சரிவு ஏற்படும் என அர்த்தம் அல்ல. மக்கள் அச்சம் கொள்ளத் வேண்டியதில்லை. ஒரு அனுமானத்தின் அடிப்படையில் தான் மண்சரிவுக்கு வாயப்பு இருப்பதாக கருத வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மண்சரிவு ஆபத்தை கூடியது, குறைந்தது, சாதாரண ஆபத்து என மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ள அந்த பகுதிகளில் மக்கள் குடியிருப்பு பகுதிகளும் உள்ளது. மக்கள் குடியிருப்புகள் இல்லாத பகுதிகளும் அடங்குவதாக அமைச்சர் அனுர பிரிய தர்ஷன யாப்பா தெரிவிக்கின்றார்.

கூடுதலான மண்சரிவுகளுக்கு மனித செயற்பாடுகளே காரணமாக அமைகின்றது. அதாவது மலைகளின் மேல் பகுதியில் பயிர்ச் செய்கை, நீரோடும் பாதைகளை தடுத்தல், மண் அகழ்வு மற்றும் வீடு கட்டுதல் போன்றவை. இந்த விடயங்களில் உரிய முறைகள் பின்பற்றப்படாததே இதற்கு காரணமாக அமைகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

நிலப் பகுதியின் முகாமைத்துவம், மண் பாதுகாப்பு, மலைகளிலிருந்து நீரோடும் பாதைகளை சீராக்கல் போன்ற விடயங்களில் மக்கள் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் அமைச்சரால் சுட்டிக் காட்டப்படுகின்றது.

இது தொடர்பாக தற்போது மக்கள் மத்தியில் அறிவுறுத்தும் வகையிலான சிறப்பு வேலைத் திட்டமொன்று தற்போது பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மலைகளிலிருந்து நீரோடும் பாதைகளை தடுக்கக் கூடாது. மக்கள் சுற்றாடல் பற்றி நன்கு தெரிந்திருத்தல், மழை காலங்களில் அவதானமாக இருத்தல், வீடுகள், கட்டிடங்கள் கட்டும் பொது தேசிய கட்டிட ஆய்வு மையத்தின் ஆலோசனைகளை பெறுதல் போன்றவற்றை மையப்படுத்தியதாக இடர் முகாமைத்துவ அமைச்சினால் இந்த வேலைத் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here