மலையகத்தில் சீரற்ற காலநிலை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

0
140

மலையகத்தில் மழையுடன் கூடிய சீரற்ற கால நிலையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தொழில்துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில்இ நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் 21.05.2018 அன்று அதிகாலை முதல் திறந்து விடப்பட்டுள்ளது.

இதேவேளை. நோட்டன் விமலசுரேந்திர நீர்தேக்கத்திலும் நீரின் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. பொகவந்தலாவ பொகவனை மற்றும் கொட்டியாகலை சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன

இதேவேளை நோர்வூட் பகுதியில் கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக நோர்வூட் பகுதியில் 05 வீடுகள் நீரில் முழ்கியுள்ளன. இதேவேளை அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவாக காணப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சாமிமலை, ஓல்டன் கீழ்பிரிவு தோட்ட ஆலயம் ஒன்றும் நீரில் மூழ்கி காணப்படுகின்றது.

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள அல்டோரியா தோட்டத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடுகள் இரண்டு முற்றாக சேதமாகியுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

21.05.2018 அன்று திங்கட்கிழமை அதிகாலை 03 மணியளவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களை சேர்ந்த பத்து பேர் அல்டோரியா தோட்ட பொது நூலகத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் மேலும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய தோற்றம் காணப்படுவதால் இப்பகுதியில் காணப்படும் ஏனைய குடியிருப்பாளர்களையும் அவதானத்தோடு இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

மண்மேடு சரிந்து பாதிக்கப்பட்டுள்ள வீடுகளின் உடமைகள் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கான சலுகைகளை பகுதி கிராமசேவர் ஊடாகவும் தோட்ட நிர்வாகத்தினூடாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மழையுடன் கூடிய பனி மூட்டம் நிறைந்த காலநிலையில் அட்டன் கொழும்பு பிரதான வீதியில் சிறிய அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், பிரதான பாதைகளில் மழை நீர் அடித்துச் செல்வதனால் பாதையில் வலுக்கல் தன்மை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாரும், அதிக மழையினால் நீரேந்தும் பகுதிகளில் குடியிருப்போர் அவதானத்துடன் இருக்குமாரும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Photo (5)

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here