மலையகத்தில் முட்டை விலை அதிகரிப்பு வர்த்தகர்கள் விற்பனையில் விலகல் மந்தபோசனம் ஏற்படும் அபாயம்.

0
261

மலையகத்தில் முட்டை விலை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக அதிகமான வர்த்தகர்கள் முட்டை விற்பனையிலிருந்து விலகியுள்ளனர். இதனால் மலையக பகுதியில் வாழும் சிறுவர்களுக்கு மந்த போசனம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினையடுத்து மலையகத்தில் வாழும் மக்கள் போசாக்கான உணவு உட்கொள்வதில் பல்வேறு நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக போசாக்கு மிக்க உணவாக முட்டையினையே உட்கொண்டு வந்தனர்.
தற்போது முட்டை ஒன்றின் விலை 60 முதல் 65 வரை விற்கப்படுவதனால் இன்று முட்டை கூட சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் வருமானம் குறைந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வாழ்வதனால் மந்த போசனை நிலை அதிகரித்து காணப்பட்டது இந்நிலையில் போசனை மிக்க உணவாக இருந்த முட்டையின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதனால் இந்த மந்த போசன நிலை அதிகரித்து மேலும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் இதனால் கல்வி சுகாதாரம் போசாக்கு உள்ளிட்ட பல விடயங்களில் பாதிப்புக்கள் ஏற்படப்போவதாக பலர் எச்சரித்து வருகின்றனர்.

அரசாங்கம் முட்டையினை பொது மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக கட்டுப்பாட்டு விலையினை அமுல்படுத்தியது இதனால் பல வர்த்தகர்கள் முட்டை விற்பனை செய்வதனை நிறுத்திக்கொண்டனர்.

குறிப்பாக தோட்டப்பகுதியிலும் நகர் பகுதியிலும் வர்த்தக நிலையங்களில் முட்டை பெற்றுக்கொள்ள முடியாத நிலையே தற்போது காணப்படுகின்றது.
இது குறித்து பொது மக்கள் மற்றும் வர்த்தகர்கள்; கருத்து தெரிவிக்கையில் நாங்கள் எங்களுக்கு உள்ள வருமானத்தில் எங்கள் பிள்ளைகளுக்கு மீனோ இறைச்சோ வாங்கி கொடுக்க முடியாது காரணம் அவை அதிக விலையில் விற்கப்படுகின்றன. அதனால் போசனை மிக்க உணவாக நாங்கள் முட்டையினை தான் கொடுத்து வந்தோம் இப்போது விலை அதிகரிப்பு காரணமாக தோட்ட கடைகளில் முட்டை பெற்றுக்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் எங்கள் பிள்ளைகளுக்கு முட்டை ஒன்றை கூட பெற்றுக்கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் எனவே இது குறித்த மக்கள் பிரதிநிதிகளும் அரசாங்கமும் கவனமெடுத்து குறைந்த கோழி வளர்ப்பினையாவது மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இது குறித்து பேக்கரி உணவு தயாரிப்பில் ஈடுபடும் நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் நான் கடந்த பல வருடங்களாக பேக்கரி உணவு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறேன் ஆனால் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்ட முட்டை விலை காரணமாக தற்போது முட்டையில் தயாரிக்கப்படும் கேக், ஸ்பன்ஞ், முட்டை ரோல்ஸ், அடை போன்ற பல தயாரிப்புக்களை நிறுத்தி விட்டு மாஜரின் போன்றவற்றில் தயாரிக்கக்கூடிய உணவுகளை மட்டும் தயாரிப்பதாக அவர் தெரிவித்தார்.

இது குறித்து முட்டை வியாபாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் நான் கடந்த பல வருட காலமாக முட்டை விற்பனையில் ஈடுபட்டு வருகிறேன் ஆனால் அந்த தொழிலினை தற்போது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காரணம் பண்ணையாளர் அதிக விலைக்கு தான் எங்களுக்கு முட்டையினை கொடுக்கிறார்கள். நாங்கள் ஒரு ரூபா வைத்து விற்பனை செய்தாலும் விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக நீதி மன்றில் வழக்கு தொடர்கிறார்கள் இதனால் ஒரு லட்சம் இரண்டு லட்சம் என அபராதம் செலுத்த வேண்டியுள்ளது அது மட்டுமல்லாமல் ஒரு பெட்டி முட்டைக்கு நாலு ஐந்து முட்டைகள் உடைந்து விடுகிறது இதனால் முட்டை விற்பனை செய்வது எங்களுக்கு நட்டமே வேறு விற்பனை இதனுடன் செய்திருந்தால் முட்டை விற்பனையினை எப்போவோ நிறுத்தியிருப்பேன்
பண்ணையாளர்களிடமிருந்து இன்று மிகப்பெரிய ஹோட்டல் காரர்கள் அதிக விலைக்கு முட்டையினை கொள்வனவு செய்வதனால் எங்களுக்கு அவர்கள் முட்டையினை குறைப்பதில்லை முட்டையினை டிமான்ட் பண்ணியே கொடுக்கிறார்கள் ஆகவே அரசாங்கம் இந்தியாவிலிருந்தாவது முட்டையினை இறக்குமதி செய்து அனைவருக்கும் குறைந்த விலையில் முட்டையினை பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் தோட்டங்கள் தோறும் முட்டை பண்ணையாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் மாத்திரமே இதற்கு தீர்வு காண முடியும் என தெரிவித்தார்.

எது எவ்வாறான போதிலும் இன்று மலையக மக்களுக்கு உள்ள நிறை உணவு என்றால் அது முட்டை மாத்திரம் தான் இதனால் இன்று பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவில் முட்டை சேர்க்கப்பட்டு வந்த போதிலும் தற்போது முட்டை வழங்குவது கூட கேள்விகுறியாகியுள்ளன.
இதனால் அரசாங்கம் அதிக கவனமெடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here