மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரப் பிரிவுக்குட்பட்ட 09 கிராம சேவகர் பிரிவுகளில் இன்று (18) திகதி இரண்டாம் கட்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சைனோபாம் முதல் டோஸ் வழங்கும் செயத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் துரைசாமிபிள்ளை சந்திரராஜன் தெரிவித்தார்.
குறித்த தடுப்பூசி வழங்கும் செயல்திட்டம், மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத ஆலய மண்டபத்தில் 2600 பேருக்கும், காசல்ரி மின்சார சபையில் 1009 பேருக்கும், கவரவலை தமிழ் வித்தியாலயத்தில், 1600 பேருக்கும், நல்லதண்ணீர் மினிமுத்து மண்டபத்தில் 1100 இற்குமாக மொத்தமாக 6309 பேருக்கு இன்றையதினம் தடுப்பூசிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ளவதற்கு தெரிவானவர்கள் எவ்வித அச்சமின்றி தடுப்பூசிகளை போட்டுக்கொண்டு இந்த கொடிய கொரோனா தொற்றிலிருந்து தம்மை பாதுகாப்பு பெற்றுக்கொள்ளுமாறும் இந்த தடுப்பூசிகள் போடுவதன் மூலம் அவர்களின் குடும்பத்தினையும் சமூக தொற்று பரவலையும் கட்டுப்படுத்தி கொள்ள முடியும்.
எனவே கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தினை நழுவ விடாது தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்து அனைவரும் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டார். இந்த தடுப்பூசி ஏற்றும் நிகழ்வுக்கு 60 வயதிற்கும் மேற்பட்ட சிரேஸ்ட்ட பிரஜைகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இது குறித்து மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் துரைசாமிபிள்ளை சந்திரராஜன் தெரிவிக்கையில்.
மலையகத்தில் இன்று பல தோட்டங்களில் கொரோனா தொற்று பரவியுள்ளன இதனால் பல தோட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அதிகமானவர்கள் தங்களது நாளாந்த தொழில்களை இழந்துள்ளார்கள் பலருக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பது தாமதமாவதனால் அவர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள் இதனால் எமக்கு இந்த கொடி நோய் தொற்று பரவாமல் இருப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி ஏற்றிக்கொள்வது தான் இந்த தடுப்பூசி ஏற்றுவதனால் எவ்வித பக்கவிளைவும் கிடையாது இதனால் எமது உயிரும் பாதுகாக்கப்படும் எனவே அச்சமின்றி அனைவரும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் அப்போது தான் நாம் இந்த அச்சுறுத்தலில் இருந்து மீள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்