மாற்று பயிர் செய்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து லிந்துல்ல ஹென்போல்ட் தோட்ட மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர், மேற்படி தோட்டத்தில் சுமார் எட்டு ஏக்கர் தேயிலை செடிகள் பராமரிக்காமல் காடாகியுள்ளது மற்றும் அந்த தோட்டத்தில் ஐந்து ஏக்கர் தேயிலை மலை தனியாருக்கு விவசாயம் செய்வதற்காக கடந்த 2010ஆம் ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டது.
அப்போது தோட்ட நிர்வாகம், காணியின் குத்தகை முடிந்தப்பின் மீண்டும் தேயிலை கன்றுகள் நடப்படும் என தோட்ட நிர்வாகம் தெரிவித்ததையடுத்து விவசாயம் நடவடிக்கை முன்னெடுக்கப்படது எனினும் அந்த நிலப்பகுதி குத்தகை முடிந்ததும் மீளப்பெற்ற தோட்ட நிர்வாகம் இந்த பகுதியில் சோளம் பயிரிட முடிவு செய்துள்ளது.
இதனால் தோட்ட மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மாற்று பயிர்ச்செய்கை காரணமாக தமது வேலைநாட்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன் மாத வருமானம் மிகவும் குறைந்துள்ளதாக தோட்ட மக்கள் குற்றம்சாட்டுகின்றனர், இந்த மாதம் சுமார் 4ஆயிரம் அளவிலேயே சம்பளம் கிடைத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.