யாசகம் பெறுபவர்கள் கூட நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக சம்பாதிக்கின்றனர் – நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெழும்பாக திகழும் தொழிலாளர்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாய் வழங்க முடியாது – தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

0
153

நாட்டில் யாசகர்கள் கூட தினமும் ஆயிரத்திற்கு அதிகமாக சம்பாதிக்கும் பொழுது நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெழும்பாக திகழும் பெருந்தோட்டதுறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது என கேள்வி எழுப்பியுள்ள கொட்டகலை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் கிறிஸ்லஸ்பாம், அந்தோணிமலை, வெலிங்டன் ஆகிய தோட்ட தொழிலாளர்கள் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் 11.10.2018 அன்று மதியம் ஈடுப்பட்டனர்.சுமார் 500ற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து கிறிஸ்லஸ்பாம் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பியதோடு, எதிர்ப்பு வாசகங்களை எழுதிய சுலோகங்களையும் ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பண்டிகை காலம் நெருங்கும் இந்த காலப்பகுதியில் நிம்மதியாக தீபாவளி பண்டிகையை கொண்டாட வாழ்வாதார அடிப்படையில் பொருளாதார சிக்கல்களுக்குள்ளாகியிருப்பதாக இதன்போது தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வேண்டி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் நாள் அடிப்படை சம்பளமாக 575 ரூபாவை தருவதாக தெரிவித்தும் உயர்த்தப்படும் சம்பள தொகை 15 வீதத்தால் அதிகரிக்கப்படும் எனவும், முதலாளிமார் சம்மேளனம் தெரிவிக்கும் அந்த கூற்று தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதற்கு சமமானதாகும் என கருதுவதாகவும் இதன்போது தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

பிச்சை எடுப்பவர்கள் கூட நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான தொகையை சம்பாதிக்கும் நிலையில் காடு, மலை ஏறி அட்டைக்கடிக்கு ஆளாகி கடும் மழை, குளிர், காற்று என எதிர்பார்க்காது நாட்டின் பொருளாதாரத்திற்காக தேயிலை கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வழங்க முடியாது என ஆதங்கம் கொண்டனர்.

எனவே தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி சுகபோக வாழ்க்கையை நடத்தும் கம்பனிகாரர்கள் இன்றைய வாழ்வாதாரத்தினை நினைவில் வைத்துக் கொண்டு அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை இறுதி பேச்சுவார்த்தையாக முன்னிருத்தி ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வழங்க வேண்டும் என அழுத்தமான கோரிக்கையையும் முன்வைத்தனர்.

 

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here